ஜாகிர் நாயக் NGOஒவின் லைசன்ஸை புதுப்பித்த விவகாரம்: 04 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மும்பை,
மத போதகர் ஜாகிர் நாயக் என்ஜிஒவின் எப்சிஆர்ஏ லைசன்ஸை புதுபித்த விவகாரம் தொடர்பாக 4 உள்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவை கேட்டு தான், அவர் தீவிரவாதியாக மாறியதாக வங்கதேச அரசு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகளை மும்பை போலீசார் மட்டுமின்றி, மத்திய அரசின் விசாரணை முகமைகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்களும் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஜாகிர் நாயக் விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி, மாநில உள்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஜாகிர் நாயக் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது போலீஸ் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். ஜாகிர் நாயக் மீதும், அவரது அமைப்பின் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் விசாரித்து வரும் நிலையில் அவருடைய என்ஜிஒவின் எப்சிஆர்ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தான் எப்சிஆர்ஏ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” அமைப்பின் எப்சிஆர்ஏ லைசன்ஸ் புதுப்பித்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் 4 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் இணை செயலாளர் ஜிகே திவேதி, இரு துணை செயலாளர்கள் மற்றும் ஒரு மூத்த அதிகாரியும் அடங்குவர்.
ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது