பாகிஸ்தானில் பொலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை முள்ளிநியூஸ்

பாகிஸ்தானில் பொலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாத தாக்குதல்: பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், திங்கள்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பயிற்சிக் காவலர்கள் 41 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தாக்குதலில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 106 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பலுசிஸ்தான் மாகாண சுகாதாரத் துறை உயரதிகாரி நூர் ஹக் பலோச் கூறும்போது, "திங்கள்கிழமை இரவில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் போலீஸ் பயிற்சி மையத்துக்குள் நுழைந்தனர். இரண்டு பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டனர். இதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 106 பேர் காயமடைந்தனர்" என்றார்.

துணை ராணுவப்படை மேஜர் ஜெனரல் ஷேர் அப்கான் கூறும்போது, "தாக்குதலில் ஈடுபட்டவர்களை சிலர் ஆப்கனில் இருந்து தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்த அமைப்பு அல் கொய்தா ஆதரவு இயக்கமாகும்.

பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி, "தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இருவர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டதால் பலியாகினர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டாலும் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்ற தேடுதலில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

தாக்குதல் நடந்தபோது பயிற்சி மையத்தில் 700 பேர் இருந்துள்ளனர். 4 முதல் 6 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக திங்கள்கிழமை காலையில் குவெட்டா நகரில் போலீஸ் உயரதிகாரி ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானி தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது குராசனி இதனைத் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பத்திரமாக பதுங்கிடத்துக்கு திரும்பியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW