சேதி தெரியுமா? - தலைமுடியிலிருந்து சூரிய ஆற்றல்

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய மின்கலங்களில் பயன்படுத்து வதற்காக, விலை குறைவான, உலோகப் பொருள் அற்ற கேத் தோட்களை (எதிர்மின்முனை) தலைமுடியிலிருந்து தயாரித் துள்ளனர். உயிரியல் கழிவிலிருந்து சூரிய மின் கருவிக்கான உபகரணத்தைத் தயாரிக்கும் முதல் முயற்சி இது. மனிதர்களின் தலைமுடியை சுத்தம் செய்து உலரவைத்து, கந்தக அமிலத்தில் தோய்த்தெடுத்து கரியாக்குதலுக்கு முந்தைய செயல்முறையைச் செய்கிறார்கள். அடுத்து வெவ்வேறு வெப்பநிலைகளில் ஆறு மணி நேரம் சூடுபடுத்தி, அதற்கு நல்ல மின்கடத்தும் திறனை ஏற்படுத்துகின்றனர்.
இதன் மூலம் தலைமுடி, துளைகள் கொண்ட கார்பன் நிலையை 850 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடைகிறது. எளிமை, வேகம், குறைந்த செலவில் தலைமுடியிலிருந்து உருவாக்கப்படும் இந்த கேத்தோட்களால் சூரிய மின்கலன்களின் உற்பத்தி செலவும் குறைவு. அத்துடன் சூரிய ஒளியை மின்சார ஆற்றலாக மாற்றுவதில் அதிகபட்ச திறனுடன் இந்த கேத்தோட்கள் செயல்படுகின்றன. பொதுவாக சூரிய மின்கலன்களில் பயன்படுத்தப்படும் கேத்தோட்கள் பிளாட்டினம் மற்றும் உலோக சல்ஃபைடுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
நீர் அடிப்படை உரிமை
தேசிய நீர்க் கொள்கை மசோதா, 2016-ன் இறுதி வரைவை அக்டோபர் 13-ம் தேதி, மத்திய அரசு வெளியிட்டது. இந்தியா முழுவதும் மாநிலங்களுக் கிடையே நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், படுகை அளவில் நீர் நிர்வாகத்தைச் சரியானபடி மேற்கொள்வதுதான் தீர்வு என்று அந்த வரைவு கூறியுள்ளது. ஒரு ஆற்றுப்படுகையைப் பகிரும் மாநிலங்களும் ஒவ்வொரு ஆற்றுப்படுகை ஆணையத்தை உருவாக்கினால்தான் வளம் குன்றாத நிலையில் ஆறுகளையும் சமவெளிகளையும் பராமரிக்க முடியுமென்றும் அந்த வரைவு கூறியுள்ளது.
இந்த மசோதாவின் இறுதி வரைவு, மத்திய அமைச்சரவையால் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். ஆற்றின் படுகையைத் தன்னகத்தே வைத்திருக்கும் மாநிலங்கள் அந்த ஆற்றின் உரிமையாளர்களாகச் செயல்படக் கூடாது, பொது அறங்காவலர்களாகவே இருக்க வேண்டும் என்று இந்த மசோதா கூறியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான, தரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது அடிப்படை உரிமை என்றும் இந்த மசோதாவின் இறுதி வரைவு கூறுகிறது. ஆற்றுப்படுகை அளவில், சரியானபடி நீரை அளப்பதில் இந்த மசோதா கவனம் செலுத்துவதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தின் செயலர் சஷி சேகர் கூறியுள்ளார்.
ஜம்முவில் ஐ.ஐ.எம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பிரதமரின் வளர்ச்சி நிதியின் ஒரு அங்கமாக ஜம்மு நகரத்தில் 2016-2017 கல்வியாண்டிலிருந்து ஐ.ஐ.எம்.(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்) கல்வி நிலையம் செயல்படவுள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அக்டோபர் 13-ம் தேதி வழங்கப்பட்டது. ஜம்முவிலுள்ள ஓல்ட் கவர்மெண்ட் காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் தற்காலிகமாக ஐ.ஐ.எம். செயல்படும். 2016 முதல் 2020 வரை நான்காண்டுகள் இந்த தற்காலிக வளாகத்தில் செயல்படவுள்ள ஐ.ஐ.எம். கல்வி நிலையத்துக்காக 61.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் 19 ஐ.ஐ.எம். கல்வி நிலையங்கள் உள்ளன. 2015-ல் மட்டும் அமிர்தசரஸ், சிர்மார், நாக்பூர், புத்தகயா, சம்பல்பூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் புதிதாக ஐ.ஐ.எம்.கள் தொடங்கப்பட்டன.
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு
இந்திய அரசு கோவாவில் தலைமையேற்று நடத்திய பிரிக்ஸ் இரண்டு நாள் மாநாடு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் டிமர் உள்ளிட்ட பத்து நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சர்வதேச ரீதியாகவும் பிராந்திய அளவிலும் எதிர்கொள்ளும் சவால்களை பத்து நாடுகளின் தலைவர்கள் கலந்து பேசினார்கள். வர்த்தகம், விளையாட்டு, திரைப்படங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சுற்றுலா குறித்த பரிவர்த்தனைகளும் இந்த மாநாட்டின் கலந்துரையாடல்களில் முக்கிய அங்கம் வகித்தன.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கோரிக்கை
காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க.வின் பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரை அக்டோபர் 14-ம் தேதி சந்தித்தார். தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியையும் சந்தித்த அவர் விவசாய அமைப்புகளின் தீர்மான நகலையும் அளித்தார். தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கூட்டி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அத்துடன் காவிரி விவகாரத்தைப் பேசுவதற்காக சட்டசபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.