அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அரசென்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் – ஜனாதிபதி முள்ளிநியூஸ்

அனைத்து பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அரசென்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன் – ஜனாதிபதி


இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சிறுவர் பரம்பரையினரை போதைப் பொருட்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் கூடுதல் கவனமெடுத்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது தொடர்பாக அரசாங்கத்தின் பல செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

உலகிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது போதைப்பொருட்களை விநியோகிப்பதற்காக பணத்தைச் செலவிட்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிடார்.

சிறுவர்கள் பொருத்தமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது பாடசாலை நேரத்தில் அன்றி, தமது பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கும்போதேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பெற்றோர் இவ்விடயத்தில் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டியது முக்கியமென்றும், பணத்தை தேடி பௌதீக வளங்களை பெறுவதற்காக முயற்சிக்கும் சில பெற்றோர்களின் மனதிலிருந்து பிள்ளைகள் தொடர்பான பொறுப்பு நழுவவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான சமூகத்தில் வாழும் மனிதர்களின் ஆன்மீக மேம்பாடு முக்கியமானதென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போதும் எதிர்காலத்திலும் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான பதில் பௌத்த தர்மத்தினூடாக எடுத்துக் காட்டப்படுவதாகவும் உலகம் முழுவதும் பேசப்படும் நிலையான அபிவிருத்திக் கோட்பாட்டின் மூலகர்த்தா புத்த பெருமானேயாவார் என்றும் குறிப்பிட்டார்.

அனுலா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு கண்காட்சிக்கூடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், சிங்கள இலக்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

கல்லூரியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரையையும் முதல்நாள் அஞ்சலுறையும் வெளியிடப்பட்டன.

கல்லூரி மாணவியான கே.பி.செனுரி பெரேரா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நான்கு நூல்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தலைமைத் தேரர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW