கார்த்தியின் நடிப்பு திக்குமுக்காடச் செய்தது: சூர்யா பாராட்டு முள்ளிநியூஸ்

கார்த்தியின் நடிப்பு திக்குமுக்காடச் செய்தது: சூர்யா பாராட்டு



என்னை மொத்தமாக ஆச்சரியப்படுத்திவிட்டாய் கார்த்தி என 'காஷ்மோரா' படம் பார்த்துவிட்டு சூர்யா தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காஷ்மோரா'. கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இப்படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தியை வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது குறித்து சூர்யா குறிப்பிடும்போது, "’பருத்திவீரன்’ பார்த்து முடித்ததும் அவனைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினேன். ஆனால் இப்போது மலைத்துப் போய் சில அடி தள்ளி நின்று பார்க்கிறேன். தம்பி டேய், கலக்கிட்ட!! காஷ்மோராவில் உன் நடிப்பு என்னை திக்குமுக்காடச் செய்தது. இத்தகைய நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு அற்புதமான படத்தை இவ்வளவு எளிதாக அவன் முடித்துள்ளதைப் பற்றி இதுவரை என்னிடம் சொல்லவே இல்லை. என்னை மொத்தமாக ஆச்சரியப்படுத்திவிட்டாய் கார்த்தி.

இப்போது என்னுடைய அளவுகோல்கள் இன்னும் உயர்ந்துவிட்டன. கோகுலும் அவரது குழுவும், தமிழ் சினிமாவை இதுவரை பார்த்திராத இடத்துக்கு உயர்த்திச் சென்றுள்ளனர். நடிகர்கள், அவர்களது நகைச்சுவை, ஒளிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு, உடைகள், வசனம், கிராபிக்ஸ் என ஓவ்வொரு காட்சியும் மின்னுகிறது. கிராபிக்ஸ் அதிகமிருக்கும் படத்தில் நடிப்பது கடினம், ஏனென்றால் சுற்றியிருக்கும் சூழலை மனதில் கற்பனை செய்து கொண்டு நடிக்க வேண்டும். ஆனால் ராஜ்நாயக்கும், ரத்னமகாதேவியும் ஒவ்வொரு காட்சியையும் பிரகாசமாக்குகின்றனர்.

இந்த பிரம்மாண்ட படைப்பை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது பெரிய திரையில் ரசிக்கக் கூடிய முழு பொழுதுபோக்குத் திரைப்படம். நீங்களும் இதை திரையரங்கில் மட்டும் பாருங்கள்!" என்று கூறியிருக்கிறார் சூர்யா.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW