இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை, அந்நாட்டு அமைச்சர் ஆய்வு
இராமேஸ்வரம், நாகை, காரைக்கால், துாத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்திய மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஆண்டுகள் இரண்டு கடந்தும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இவை இலங்கை காரைநகர், யாழ்ப்பாணம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில படகுகள் சேதமடைந்துவிட்டது. படகுகளை இழந்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலத்த இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இலங்கைவசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து இலங்கைவசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அமைச்சர் அமரவீர நேற்று ஆய்வு செய்தார்.
மேலும் சேதமடைந்த படகுகள், நல்ல நிலையில் உள்ள படகுகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசு விரைவில் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளனர்.