முஸ்லிம் மக்களின் சமத்துவமான அரசியல் இருப்பை மறுதலிப்பது ஏன்? முள்ளிநியூஸ்

முஸ்லிம் மக்களின் சமத்துவமான அரசியல் இருப்பை மறுதலிப்பது ஏன்?


கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகளின் மன அமைப்பு (Mindset), கருத்தியல் சட்டகம் (Ideological Framework) குறித்த அலசல்

தமிழ் மக்களின் அகப் பன்மைத்துவம்
தமிழ் மக்கள் உள்ளார்ந்து -அக ரீதியாக பல உப குழுக்கள், உப கலாச்சாரங்கள், வேறுபட்ட பண்புகள், போக்குகள் கொண்ட அகப் பன்மைத்துவம் நிறைந்தவர்கள்.

இது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்நாட்டிலுள்ள ஏனைய எல்லா இனத்தவர்களுக்கும் பொருந்தும்.

தமிழ் மக்களுள் கடும்போக்கு வறட்டு தேசியவாதிகள், மிதமான போக்குடைய தேசியவாதிகள், முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் சமத்துவமான சக தேசியங்களாக அங்கீகரிப்பவர்கள், தேசியவாதத்தை அடியோடு எதிர்ப்பவர்கள், இடதுசாரிகள், வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள் கொண்டோர் என, பல தரப்பட்டவர் உள்ளனர் என்ற அடிப்படை உண்மையை மனங் கொண்டே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

இக்கட்டுரையின் நோக்கம்
கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள் குறித்தே இதில் கவனம் செலுத்தப்படுகிறது. அண்மைக் காலமாக இந்தப் போக்கைப் பிரதிபலிப்போரின் அரசியல் செயற்பாடுகள் தூக்கலாக முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இது ஆரோக்கியமானதல்ல.

இந்தத் தீவிரப் போக்கை மறுதலித்து, பல தரப்பட்ட மக்கள் மத்தியில் உரையாடலை ஊக்குவித்து, சந்தேகங்களைக் களைந்து, புரிந்துணர்வை வளர்ப்பதே இதன் முக்கிய இலக்கு.

‘மக்களுக்குப்’ பின்னேயுள்ள அரசியல்
இந்தக் கட்டுரையில் மக்கள் என்ற சொல் குறிப்பான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னேயுள்ள அரசியல் அர்த்தங்களை முதலில் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். அப்போதுதான் கட்டுரையின் மைய வாதங்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளலாம்.

சாதாரண மொழி வழக்கில் உள்ள ‘மக்கள்’ என்ற பிரயோகத்திற்கும், அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படும் ‘மக்கள்’ என்ற பிரயோகத்திற்கும் இடையே நுட்பமான பொருள் வேறுபாடு உள்ளது. மக்கள்தான் அரசியல் அதிகாரத்திற்கு உரித்துடையவர்கள். இதுதான் அந்த வேறுபாடு.

‘மக்கள்’ என்ற பிரயோகம் அரசியல் ரீதியாக அர்த்தம் மிக்கது. ஆங்கிலத்தில் people என்ற சொல் இதற்கு சமமாக பயன்பாட்டில் உள்ளது. இதன் பன்மைச் சொல்லான ‘மக்கள்கள்’ (‘peoples’) என்பது சாதாரண மொழிப் பயன்பாட்டிலோ, பொதுப் பிரயோகத்திலோ வழக்கில் இல்லை.

ஆனால், அரசியல் ரீதியாகவும் சட்ட நுணுக்கங்களிலும் இந்தப் பன்மைப் பிரயோகம் நடைமுறையில் புழக்கத்தில் உள்ளது.
ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் அதிகாரத்திற்கு உரித்துடைய மக்கள் தொகுதியினர் காணப்படும்போது, இந்த ‘மக்கள்கள்’ என்ற பன்மைப் பிரயோகம் இன்றியமையாதது.

சிங்களப் பேரினவாதமும் மகாவம்ச மன அமைப்பும்
‘இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. அவர்கள்தான் மண்ணின் மைந்தர்கள்- பூர்வீகக் குடிகள். மற்ற எல்லோரும் வந்தேறு குடிகள். சிங்கள மக்கள் மட்டுமே, இந்நாட்டில் மக்கள் என்ற அந்தஸ்த்தைப் பெறுகிறார்கள்’ என்பதுதான் கடும்போக்கு சிங்களப் பேரினவாதிகளின் நிலைப்பாடு.

அதேபோல, ‘ஏனையோர் இங்கு வாழ்ந்து விட்டுப் போகட்டும். அது சிங்களவர்கள் தங்கள் பெருந்தன்மையால், ஏனைய சிறுபான்மையினருக்குப் போட்ட மடிப் பிச்சை. அளவுக்கு அதிகமாகத் துள்ளாமல் இங்கு அடக்க ஒடுக்கமாக வாழ்ந்து விட்டுப் போங்கள்’ என்பதுதான் கடும்போக்கு சிங்களத் தேசியவாதிகளின் மன அமைப்பு.

இதற்கு அவர்கள் பயன்படுத்துகிற அஸ்திரம், திரிபுபடுத்தப்பட்ட வரலாறு. மகாவம்சம், பேரினவாதிகளுக்கு விருப்பமான புனைவுகள், கற்பனைகள் அடங்கிய சிங்களவர்களது பழம் பெருமை கூறும் ஒரு நூல். அதனால்தான் இதனை ‘மகாவம்ச மன அமைப்பு’ (Mahavamsa Mindset) என அழைப்பர்.

ஆனால், இவர்கள் சிங்கள சமூகத்தில் பெருவாரியானவர்கள் அல்ல என்பதையும் சுட்டிக் காட்டவே வேண்டும். பெருந்தொகையானோர் அப்பாவிச் சனங்கள். அவர்களை இந்த அரசியல்வாதிகள்தான் உசுப்பேத்தி விடுகிறார்களே ஒழிய, மக்கள் இதில் பெரிய ஆர்வம் உடையவர்கள் அல்ல.

அவர்களுள் கணிசமானோர் மற்றவர்களை மறுக்கும், இந்தப் புறந்தள்ளும் தேசியவாதத்தின்(Exclusive Nationalism) காதலர்கள் அல்ல. சிங்கள சமூகத்தில் மட்டுமல்ல, எல்லா சமூகங்களிலும் இதுதான் யதார்த்தம்.

வைதீக தமிழ்த் தேசியவாதமும் ஆண்ட பரம்பரை மன அமைப்பும்
இதேபோல கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள், ‘இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு மக்கள்களே ( கவனிக்க: மக்கள்கள் ) உள்ளனர். இங்கு இது இரண்டும்தான் ஆண்ட பரம்பரை’ என்று கருதுகின்றனர்

ஆகவே, ‘சிங்களவர்கள் தங்களுக்கான அரசை சிறிலங்காவில் அமைப்பது பற்றி, இந்தக் கடும்போக்காளர்களுக்கு அடிப்படையில் பிரச்சினை இல்லை. சுதந்திரத்துக்குப் பின் சிங்கள அரசு அமைக்கப்பட்டு விட்டது’ என்ற கருத்திலேயே இவர்கள் உள்ளனர்.

ஆனால், ‘தமிழ் அரசு ஒன்றை பாரம்பரிய தமிழர் தாயகத்தில் – அதாவது ஈழத்தில் – அமைக்க வேண்டும். இதனை இப்போதுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைப்பதுதான் தமது ஒற்றை ‘அபிலாசை’ என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

கடும்போக்கு தமிழ் தேசியவாதிகளது பெருங்கனவில் உள்ள பாரம்பரிய ஈழத்தில், புத்தளப் பிரதேசமும் அடங்கும். ஆனால், இப்போது அதை (புத்தளப் பிரதேசத்தை ) சில நடைமுறைக் காரணங்களுக்காக விட்டுக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர்.

இவர்களைப் பொறுத்தவரை, ‘இலங்கைத் தீவில், சிறிலங்கா சிங்கள அரசு, தமிழீழ தமிழ்த் தனியரசு என்ற இரு அரசுகள் நிறுவப்பட வேண்டும். அதற்காகவே இங்கு இனப் பிரச்சினை – இன முரண்பாடு , 30 வருடகால ஆயுதப் போர் – சிவில் யுத்தம் எல்லாமே நடந்தது.

2009 மேயில் இந்த ஆயுதப் போர் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போர் முடிவுக்கு வந்தாலும், இந்த சிந்தனைப் போர் – கருத்தியல் போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.போரில் வென்ற மனநிலை, தோற்ற மனநிலை இரண்டினதும் மோதல் போக்கினுள் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிக்கித் தவிக்கிறது.

இந்தப் பின்புலத்தில்தான், ‘தமிழீழத்தில் தமிழர்கள்தான் பெரும்பான்மையினர். முஸ்லிம்களும் சிங்களவர்களும் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர்’ என்ற மனப்பதிவில் இவர்கள் ஊறிப் போயுள்ளனர்.

பேரினவாதிகள் போல, வரலாற்றையும் ஆண்ட பரம்பரைக் கதையையுமே இவர்களும் தமது அஸ்திரமாய்ப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து தனியே ஆராயப்பட வேண்டும்.

நியாயமான அரசியல் தீர்வு
தமிழ் மக்கள் இனப் பிரச்சினையாலும் போரினாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நியாயமான அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

அதேவேளை சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என்று எல்லோரது அபிலாசைகளும் கருத்தில் கொள்ளப்பட பேண்டும். ஏனைய கலாச்சார சிறுபான்மையினர், சிறு சமூகங்கள் உள்ளிட்ட எல்லோரது நலனும் கருத்தில் எடுக்கப்படும் தீர்வுதான் முழுமையான இறுதித் தீர்வாய் அமையும்.

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டிக் கோரிக்கை
போருக்குப் பிந்திய உள்ளூர்- பிராந்திய – புவிசார் சூழமைவில், தனிநாட்டையோ தனியரசையோ கோர முடியாது என்பது பகிரங்க ரகசியம். இந்த வெளிப்படை உண்மையை இந்தக் கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால்தான் இந்த ஈழக் கோரிக்கையின் வீரியத்தைக் குறைத்து சற்றே மெதுவாக வண்டியை ஓட்டுகின்றனர்.

புலிகள் இல்லாத இந்தப் பின்புலத்தில்தான், தனிநாட்டுக் கோரிக்கையை தற்காலிகமாக ஆறப் போட்டுவிட்டு, இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி பிரதேசம் ஒன்றைக் கோருகின்றனர்.

சமஷ்டி அரசைக் கேட்பதுதான் இப்போது சாத்தியம் என்பதால், உச்சபட்ச அதிகாரப் பகிர்வு கொண்ட, இணைந்த வடக்கு கிழக்கு சமஷ்டி பற்றிய பேச்சு மேல் எழுகிறது.
தமிழர்களைப் போல, முஸ்லிம்கள் சம அந்தஸ்து கொண்டவர்கள் அல்ல என்ற வாதம்

முஸ்லிம்களை ஒரு ‘குழுவினராக’ இவர்கள் பேசியும் எழுதியும் வருவதற்குப் பின்னே ஒரு கருத்தியல் பார்வை இருக்கிறது. அந்தக் கருத்தியல், முஸ்லிம்களுக்கு சம அந்தஸ்து கொடுத்துப் பார்ப்பதற்கான பெரும் மனத் தடையாக மாறி விட்டது.

இணைந்த வடகிழக்கில், முஸ்லிம்களுக்கு ‘மக்கள்’ என்ற அந்தஸ்த்தைக் கொடுத்துப் பார்க்க இந்தக் கடும்போக்கு தமிழ்த் தேசியவாதிகள் தயாரில்லாமல் இருப்பதன் பின்புலம் இதுதான்.

இந்தத் தீவிர, புறந்தள்ளும், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் குரலாகவே இப்போது தமிழ் மக்கள் பேரவை இயங்குகிறது. இதன் இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் இருக்கிறார்.

அவருடைய இந்த கடும்போக்குத் தமிழ்த் தேசியவாத மனநிலையின் இறுக்கம் காரணமாகவே முஸ்லிம்கள் குறித்து திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அவர் அப்படி என்னதான் சொன்னார்?
”எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது அவர்களின் தாய் மொழிதான். தமிழரானாலும் சிங்களவர்களானாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகின்றது.

“முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது வடிவம் மதம் சார்ந்தது என்றும், அது மொழி சார்ந்தது அல்ல என்றும் கூறி வருகின்றனர்.

“கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, எழுதி, கற்று வருகின்றதனால் முஸ்லிம்களின் கலை வடிவமும் மொழி சார்ந்தது என்று கூறத் தோன்றுகின்றது.

“மொழியைப் பேசுவதற்குக் கற்றுக் கொண்ட பின்னர்தான் நாம் மதத்தை அறிந்து கொண்டோம். இந் நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்பானவர்களேதான். தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்”

வரலாற்றையும் யதார்த்தத்தையும், முஸ்லிம்களது அரசியல் தனித்துவத்தையும் அப்பட்டமாக மறுதலிக்கின்ற வெற்று அரசியல் கோஷமேயன்றி இது வேறென்ன? அரசியல் லாபத்தை சம்பாதிப்பதற்கான மலினமான உத்திதான் இது.

விக்னேஸ்வரன் போன்ற ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அதுதான் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் ஆதங்கம். ஆனால், அவரும் இந்த மாமூல் அரசியலுக்குள் மழுங்கிப் போய் விட்டதுதான் பெரும் அவலம்.

விக்னேஸ்வரன் ஐயா இந்த மாமூல் அரசியலில் நன்கு தேறி வருகிறார்.
ஐயா மட்டுமல்ல, அவர் இப்போது தலைமை கொடுக்கும் தமிழ் உணர்வாளர்கள் பலரும், இதற்குப் பின்னே வெளிப்படையாகவும் திரைக்குப் பின்னேயும் அணி திரண்டுள்ளனர். வன் தேசியம், மென் தேசியம் பற்றி தத்துவார்த்த விவாதங்கள் நடத்தி இதற்கு ஒரு கருத்தியல் கட்டுமானத்தயும் சமைத்துள்ளனர்.

இந்தத் தீவிர கடும்போக்குத் தமிழ் தேசியம், இணைந்த வடகிழக்குக்கு மாற்றாக எதையும் பரிசீலிக்கத் தயாரில்லை. முஸ்லிம் மக்கள், ஈழம் நோக்கிய தங்களது அரசியல் பாதையைக் குழப்புவதாகவே இவர்கள் சிந்திக்கின்றனர்.

இதுதான் மிக ஆபத்தான அரசியல் பொறி. தமிழ் – முஸ்லிம் மக்களைக் குழப்பி மோத விட்டு விட்டு, அதில் குளிர் காய பல சக்திகள் காத்திருக்கின்றன. அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக மாறி விடும்.

இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகளில் முஸ்லிம்கள் குறித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை சுட்டிக்கு காட்டுவது மிக அவசியம்.

“வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தனித்துவத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். முஸ்லிம் சமூகத்தால் இணைந்த வடக்கு கிழக்கில் தமது குழு சார் உரிமைகளை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு எடுக்கும் முன் வைப்பு எதுவாயினும், அது தொடர்பில் அவர்களுடன் கலந்தாய்வு செய்யத் தயாராக இருக்கின்றோம் என பற்றுறுதியுடன் கூறிக் கொள்கிறோம்.”

மேம்போக்கில் பார்த்தால் முஸ்லிம்களை அனுசரிப்பது போல தோன்றினாலும், இதற்குள் வார்த்தைகளின் அரசியல் விளையாட்டு ஒளிந்திருக்கிறது.

ஒரு புறம், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்பவர்கள், இன்னொரு புறம் முஸ்லிம்களை ஒரு ‘சமூகம்’ என்றுதான் கூறுகின்றனர்.

இன்னும் ஒரு படி கீழிறங்கி முஸ்லிம்களது ‘குழு சார்’ உரிமைகள் குறித்துப் பேசத் தயார் என்று கூறியுள்ளனர். அதுவும் ‘இணைந்த வடக்கு கிழக்கு’ என்ற ஒரு நிலைக்குள்ளிருந்து கொண்டுதான் பேசத் தயார் என்கின்றனர்.

‘முஸ்லிம் சமூகம்’ என்று எழுத உயர்ந்த தமிழ் மக்கள் பேரவையினரின் கைகளுக்கு, ‘முஸ்லிம் தேசம்’ (Muslim Nation) என்றோ, ‘முஸ்லிம் அரசியல் சமூகம்’ என்ற அர்த்தம் தரும் Muslim Polity என்றோ அல்லது ‘முஸ்லிம் மக்கள்’ என்றோ ஏன் எழுத வரவில்லை?

இந்த சொல் தேர்வுகள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. ஆழ ஊடுருவிப் போயிருக்கும் தமிழ் மேலாதிக்கக் கருத்தியலின் புற வடிவமே இது.

கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் இவ்வாறான கருத்துக்கள், ‘எழுக தமிழ்’ நிகழ்வு மூலம் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் எல்லாமே, தர்க்க ரீதியாக தமிழ்த் தேசியவாதிகளின் விருப்புக்கு மாறாக, எதிர் விளைவுகளையே கொண்டு வந்து சேர்க்கும்.

முஸ்லிம் பரிமாணத்தை புறந்தள்ளுவதன் அபாயம்
வரலாற்றில் முஸ்லிம் மக்களைப் பகைத்ததற்கு, தமிழ்த் தேசியம் கொடுத்த விலை மிகப் பெரியது. மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை நோக்கி அது சென்று விடக் கூடாது.
அதைப் புரிந்து கொள்ளும் மன நிலையில் இப்போது அவர்கள் இல்லை. காலம் கடந்துதான் அவர்கள் இதைப் புரிந்து கொள்ளுவார்கள்.

சமீபத்தில் ‘Muslims Should Be Heard’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாராளுமன்ற உரையிலிருந்து, ஒரு மேற்கோள் காட்டுவது மிகப் பொருத்தமானது. அது பலருக்கும் பதிலாய் அமையும்.

“முஸ்லிம் பரிமாணம் என்பது வேறுபட்டது; வித்தியாசமானது. ஏனென்றால், முஸ்லிம்களை அவர்களது சமயப் பிணைப்புதான் இறுக ஒன்றிணைத்திருக்கிறது. முஸ்லிம்கள் ஒரு மொழி சார்ந்த சமூகம் அல்ல.

“தமிழ் இனத்தவர்களின் அபிலாசைகளை விட, அவர்களது அபிலாசைகள் வேறுபட்டவை. தமிழ் இனத்தின் மொழி சார்ந்த அபிலாசைகளை நிறைவேற்றுவதன் மூலம், முஸ்லிம் சமூகத்தினரின் விவகாரங்களைத் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்று கருத முடியாது.”

குறிப்பு: இந்தக் கட்டுரை, (30.09.2010 வெள்ளிக்கிழமை) விடிவெள்ளி பத்திரிகையில், 07ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW