ஜனாதிபதியின் மறுபக்கம் : அவரின் உள்ளே இருக்கின்றமற்றுமொரு நிலைப்பாடு வெளியாகியதா..? நல்லாட்சியில் பிளவுகள் !! முள்ளிநியூஸ்

ஜனாதிபதியின் மறுபக்கம் : அவரின் உள்ளே இருக்கின்றமற்றுமொரு நிலைப்பாடு வெளியாகியதா..? நல்லாட்சியில் பிளவுகள் !!


நல்லாட்சி அரசாங்கத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டுவிட்டதோ……., அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ……என்ற ஐயப்பாடுகள் இப்போது பரவலாக எழுந்துள்ளன.

புலனாய்வுபொலிஸ் பிரிவினர் -(சி.ஐ.டி),நிதி குற்றவியல் விசாரணை பிரிவினர் (எவ்.சி.ஐ.டி)மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைஆணைக்குழுவினர் மீது ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ஜனாதிபதி என்ற ரீதியில் வெளியிட்டுள்ள அதிருப்தியே இதற்குக் காரணமாகும்.

முன்னாள்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ, முன்னாள்கடற்படைத்தளபதிகள், இராணுவ புலனாய்வு பிரிவினர்ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதையும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுந் தொனியில் கண்டித்திருக்கின்றார்.

இந்த விசாரணையாளர்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்ஒன்றின் கீழேயே தமது விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் பகிரங்கமாகக்குற்றம் சுமத்தியிருக்கின்றார். இந்த வகையில் செயற்பட்டால்கடும் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கின்றார்.

முன்னைய ஆட்சியில் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக இயங்க வேண்டிய ஆணைக்குழுக்கள் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

மனிதஉரிமைகள், நீதித்துறை, பொலிஸ், தேர்தல் உள்ளிட்டமுக்கிய துறைகளில் தனித்தனியான ஆணைக்குழுக்களின் பொறுப்பில் செயற்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று பலரும்உணர்ந்திருந்தார்கள்.

ஜனநாயகத்தின்அடிப்படைத் தன்மைகளை உறுதி செய்வதற்கும் ஜனநாயகரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கும் இது அத்தியாவசியமாகும் என்பதும்வலியுறுத்தப்பட்டிருந்தது.

புதிய ஆட்சி – நல்லாட்சி நாட்டில்மலர்ந்ததும், இத்தகைய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.அவற்றில் முக்கியமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் நிதிமோசடி விசாரணைப் பிரிவும் அதி முக்கிய தேவை குறித்து அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டன.

முன்னைய ஆட்சியில் பெரும் இலஞ்ச ஊழல்நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்ததாகப் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஊழல் நடவடிக்கைகளையும் இலஞ்சஊழலையும் இல்லாதொழிக்க வேண்டிய தேவை எழுந்திருந்தது.

எங்கு பார்த்தாலும் ஊழல் எதிலும் ஊழல்என்ற வகையில் நிலைமைகள் இருந்ததாகப்பரவலாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்திருந்தன.

இதன் காரணமாகவே, ஊழல் மோசடிகளுக்கு எதிரானமுன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த முன்னணி, அரசாங்கத்தின் பல துறைகளிலும் இடம்பெற்றுவந்த ஊழல் மோசடிகள் தொடர்பானதகவல்களைத் திரட்டி, அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கோரி வந்தது.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பி அது போராட்டம் நடத்தி வந்தது.

நல்லாட்சிஅரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதைத்தொடர்ந்து நிதி குற்றவியல் விசாரணைப்பிரிவினருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கும் இந்த ஊழல், மோசடிகள் தொடர்பானபல தகவல்களை வழங்கி அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி பேருதவி புரிந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீற்றத்துடன் வெளியிட்டுள்ள கருத்துக்களையடுத்து, ஊழல் மோசடிகளுக்கு எதிரானமுன்னணி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அந்த முன்னணியின்ஆலோசகரும் முக்கியஸ்தருமாகிய கீர்த்தி தென்னக்கோன் இதனை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி உள்ளிட்டநாற்பதுக்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பவும், நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கும் பெரும் பங்களிப்பு செய்திருந்தன.

குறிப்பாக மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவெற்றிபெறுவதற்காக இந்த அமைப்புக்கள் உழைத்திருந்தன.

ஆனால்,ஆட்சிப் பொறுப்பை ஏற்று 16 மாதங்களின் பின்னர், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தவர்களைஏன் விசாரணை செய்தீர்கள்?

அவர்களைஏன் நீதிமன்றத்தில் நிறுத்தினீர்கள் என்ற தோரணையில் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து வெளிப்பட்டுள்ள கருத்துக்கள்இந்தப் பொது அமைப்புக்களை சீற்றம்கொள்ளச் செய்திருக்கின்றன.

அரசியல்பிளவின் அடையாளமா?

புலனாய்வுபொலிஸ் பிரிவினர், நிதி குற்றவியல் விசாரணைபிரிவினர் மற்றும் இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவினரின் நடவடிக்கைகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்சார்ந்தது என்பதே ஜனாதிபதியின் குற்றச்சாட்டாகும்.

இராணுவத்தைப்பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, விடயங்களை விவாதிப்பவர்களினாலேயே இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருக்கின்றனஎன்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருப்பது போன்றுவிசாரணை நடவடிக்கை அரசியல் சார்ந்ததாக இருந்தால்,அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை ஜனாதிபதிவெளியிட வேண்டும் என்று ஜே.வி.பி.யினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஊழலுக்குஎதிரான விசாரணைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் என்ற காரணமாகத்தான் அவர்கள்குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவை விசாரணைக்கு உட்படுத்தி, நீதிமன்றத்திற்கு இழுத்திருந்தனர் என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.

எனவே, இதன் அடிப்படையில் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அதிருப்தியும்சீற்ற உணர்வும் உண்மையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கியதாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகின்றது.

மகிந்த ராஜபக் ஷ அணியினரை அரசியல்ரீதியாகப் பிளவுபடுத்தும் வகையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷவைத் தன்பக்கம்இழுப்பதற்காகவே,

அவர் மீதான ஊழல்மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளில் அதிருப்தியடைந்திருப்பதாகஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபாவேசம் கொண்டுகருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார் என்று இதனை வேறுஒரு கோணத்தில் இருந்து நோக்குபவர்கள் கருதுகின்றார்கள்.

ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நாளில் இருந்தே,மஹிந்த ராஜபக் ஷவின் பின்னால்அணிசேர்ந்தவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

அவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை ஒரே கட்சியாகக் கொண்டுநடத்துவதற்கும் அதே போன்று ஐக்கியதேசிய கட்சியின் தலைவராகிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்இணைந்த நல்லாட்சியைக் கொண்டு நடத்துவதற்கும் எதிரானநிலைப்பாட்டில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலைமையை முறியடிப்பதற்கான ஒரு காய் நகர்த்தலாகவேஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் மோசடிகளுக்குஎதிரான விசாரணை நடவடிக்கைகள் குறித்துதிடீரென ஒரு பகிரங்க மேடையில்சீறிப் பாய்ந்துள்ளார் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்தரப்பில் இருந்து ஜனாதிபதியின் கடுமையானகருத்துக்களுக்கு பதில் உணர்வுகள் உடனடியாகவெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தரப்பைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஆதரவானவர்கள் என சுட்டிக்காட்டப்படுகின்ற ஒரு தரப்பினர்மீது, அரசியல் நிகழ்ச்சி நிரலின்கீழேயே செயற்படுகின்றார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டிருப்பதைஒரு சாதாரண விடயமாகக் கொள்ளமுடியாது.

நேரடியானதோர்அரசியல் மோதலைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அரசியல்நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் இருப்பவர்கள் அல்லது இருப்பவர் யார்என்பதை வெளியிடாமல் கருத்துரைத்திருக்கின்றார் என்று ஒரு சாரார்கருதுகின்றனர்.

ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஅல்லது ஐக்கிய தேசிய கட்சியின்சார்பில் இருந்து, கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும்போதுதான் இது உண்மையிலேயே ஓர்அரசியல் பிளவின் அடையாளமா? இல்லையா?என்பது தெரிய வரும்.

சந்தேகங்களும்கேள்விகளும்

ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை. ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நல்லாட்சி நடத்தப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கங்களைமுன்னிறுத்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊழல் மோசடிகளுக்காக நடத்தப்பட்டவிசாரணைகளில், சட்ட ரீதியான செயற்பாடுகளில்முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ, முன்னாள்கடற்படைத்தளபதிகள், மற்றும் இராணுவ புலனாய்வாளர்களைஉட்படுத்தியமைக்காக சீற்றம் கொண்டிருப்பது, அவருடையதலைமையிலான அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து சந்தேகம் கொள்ளச் செய்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், ஏன் இந்த நிலைமைஎன்ற கேள்வியையும் எழுப்பியிருக்கின்றது.

மிதக்கும்ஆயுதக் களஞ்சியம் என்று வர்ணிக்கப்பட்ட கப்பலில்இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் தொடர்பில் எவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினால் அரசாங்கத்திற்குப் பெருமளவில் நட்டம் ஏற்பட்டிருந்ததாகத் தகவல்கள்வெளியாகியிருந்தன. இந்த எவன்கார்ட் நிறுவனத்துடன்சம்பந்தப்பட்ட நிலைமை காரணமாகவே முன்னாள்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷவும், முன்னாள்கடற்படைத்தளபதிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

எவன்கார்ட்நிறுவனத்தின் ஊழல் மோசடி தொடர்பானஉண்மை நிலைமை கண்டறியப்பட வேண்டியதுமிகவும் முக்கியமாகும். அதற்காகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் யுத்தத்தில் வெற்றிகொள்வதற்காகஉழைத்த படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின்செயலாளராகப் பதவி வகித்தவர்கள் விசாரணைசெய்யப்படுவதில் எந்தவிதத் தவறும் கிடையாது எனஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணியைச் சேர்ந்தகீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியஸ்தர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும், அவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்திருப்பதும்தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றும், யுத்தத்தைவெற்றி கொண்டவர்களை எவ்வாறு நடத்துவது என்றுசம்பந்தப்பட்ட விசாரணையாளர்கள் புரிந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுபற்றிகுறிப்பிட்டுள்ள கீர்த்தி தென்னக்கோன், படைத்தளபதிகள் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு முக்கிய பங்காற்றினர் என்பதில்எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆயினும் அவர்கள் நாட்டின்சட்டதிட்டங்களுக்கு முரணாகச் செயற்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. அதனை எவரும் விமர்சிக்கமுடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்,தமக்குரிய சட்ட வரையறைகளுக்கு அமையவேதமது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது எனது நம்பிக்கைஎன்றும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஊழல்களுக்குஎதிரான விசாரணைகளுக்காக படைத் தரப்பினர் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டது ஒரு புறமிருக்க, இராணுவபுலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலர் பதினாறு மாதங்களாகவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு பற்றியும் ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார்.

‘குற்றம்இடம்பெற்றிருப்பின் வழக்குத் தாக்கல் செய்யுங்கள். இல்லையெனில்அவர்களை விடுதலை செய்யுங்கள். வழக்கைத்தொடர்வதற்கு குற்றம் ஒன்று இருப்பதுதெரியவந்திருந்தால், அவர்களுக்குப் பிணை வழங்கி வழக்கைத்தொடருங்கள். விடுதலை செய்தல், வழக்குத்தாக்கல் செய்தல், பிணை வழங்குதல் போன்றவைதர்மத்துக்கு உட்பட்ட விடயங்களே. அவைஅடிப்படை மனித உரிமைகளாகும். அவைநாட்டு மக்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரமாகும்’என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன்இணங்கி செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன்இது குறித்து கருத்து வெளியிடுகையில் பதினாறுமாதங்கள் இராணுவ புலனாய்வாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் ஜனாதிபதி, பதினாறுவருடங்களுக்கு மேலாக தமிழ் அரசியல்கைதிகள் சிறையில் வாடுவதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லைஎன வினவியுள்ளார்.

ஜனாதிபதியின்கூற்று தவறானது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.இராணுவத்தினருக்கு ஒரு சட்டம். பொதுமக்களுக்குஒரு சட்டம் என்று இருக்கமுடியாது. தமிழ் அரசியல் கைதிகளைகடந்த நவம்பர் மாதம் விடுவிப்பதாகதெரிவித்தார்கள். ஆனால், இன்னும் அவர்கள்முழுமையாக விடுவித்து முடிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சிஅரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ்மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் நன்மைகளைச் செய்யும். அதற்கு அவர்களுக்கு அவகாசம்தேவை. அதற்காகப் பொறுமை காக்க வேண்டும்.பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மக்களுக்குக் கூறிஅவர்களை வழிநடத்தி வந்தது.

ஆனால்,ஜனாதிபதியின் அண்மைய உரை நல்லாட்சிஅரசாங்கம் நன்மையைச் செய்கின்ற வழிமுறையில்தான் இன்னும் பயணிக்கின்றதா என்றகேள்வியை எழுப்பியுள்ளது.

இராணுவத்துக்குஒரு சட்டம். மற்றவர்களுக்கு ஒருசட்டம் என்ற போக்கில்தான் அரசாங்கம்பயணிக்கப் போகின்றதா என்ற கோள்வியும் எழுந்துள்ளது.

முன்னையஅரசாங்கம் இராணுவத்தினருக்கு முன்னுரிமை வழங்கியிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் அத்தகைய போக்கில் மாற்றத்தைக்கொண்டு வந்திருந்தது. ஆனால், இப்போது ஊழல்மோசடிகள் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணை செய்யப்படுவது குறித்துஜனாதிபதியிடம் இருந்து வெளிப்பட்டுள்ள கருத்துக்கள்இந்த அரசாங்கமும் முன்னைய அரசின் போக்கிலேயேசெயற்படப் போகின்றதோ என்ற அச்சப்பாட்டைத் தோற்றுவித்திருக்கின்றன.

மறுபுறத்தில்ஜனாதிபதியின் கருத்துக்களை அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற ஓர் அரசியல் பிளவின்அடையாளமாக நோக்குபவர்கள் மத்தியில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு என்னநடக்கும் என்பது குறித்து கவலையடையத்தொடங்கியிருக்கின்றார்கள்.

நாட்டின்இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துஅமைத்த நல்லாட்சியை இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்குமுதலில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. பின்னர், இந்த நல்லாட்சி தனக்குரியஆட்சிக்காலம் முழுதும் இணக்கப்பாட்டுடன் செயற்படும் என தெரிவித்த அரசதரப்பினர், மக்கள் மத்தியில் நம்பிக்கையைஊட்டியிருந்தார்கள்.

ஆனால்,அரசியல் ரீதியாக உணர்ச்சிவசப்படாதவர், நிதானமாகச் செயற்படுபவர்என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதியுணர்வு நிலையில்வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவரின் உள்ளே இருக்கின்றமற்றுமொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

எது எப்படி இருந்த போதிலும்,நாட்டு மக்களும், ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நம்பியிருப்பவர்களும் நம்பிக்கை இழந்து, குழப்பமடையத் தக்கவகையில் அரச தரப்பினர் செயற்படுவதுநல்லதல்ல. மக்கள் குழப்பமடைவதும், சந்தேகங்களுக்குஉள்ளாவதும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW