மூன்று முறை தலாக்: அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முள்ளிநியூஸ்

மூன்று முறை தலாக்: அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்


மூன்று முறை தலாக் கூறி விவாகரத்துப் பெறும் முறை குறித்து மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.

முன்னதாக, தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்புகள் மனு தாக்கல் செய்தன.இந்த விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் தலாக் விவாகரத்து முறைக்கு இடமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரும், மாநில கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞருமான சஃபாரியா ஜிலானி கூறியதாவது:90 சதவீத முஸ்லிம் பெண்கள் ஷரியத் சட்டத்துக்கு (தலாக் முறை) ஆதரவாகவே உள்ளனர். தலாக் முறை குறித்து மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் வேறு எவராவது தலையிட்டால் முஸ்லிம்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.தலாக் முறையை தடை செய்வது என்பது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சதியாகும். விவாகரத்து என்பது விரும்பத்தகாத செயலாகத்தான் இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக சதியில் ஈடுபடும் பாகிஸ்தானுக்கு நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பாடம் புகட்ட வேண்டும். பாகிஸ்தானில் மசூதிகளில் கூட பாதுகாப்பு இல்லை. தாங்கள் செய்த சதியில் அவர்களே சிக்கிக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது: இதனிடையே, தலாக் முறை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மௌலானா சையது ஜலாலுதீன் உமரி கூறுகையில், “முஸ்லிம்கள் விவாகரத்து, பலதார மணம் மற்றும் தனிச்சட்டங்களை தங்கள் மதத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இந்த விஷயத்தில் ஷரியத் சட்டத்தைப் பின்பற்ற அவர்கள் கடமைப்பட்டுள்ளனர். தலாக் முறை விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் குறுக்கிடும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW