News break : பத்தரமுல்லை மஹிந்த சந்திப்பை முழு முஸ்லிம்களும் எதிர்க்கின்றனர் முள்ளிநியூஸ்

News break : பத்தரமுல்லை மஹிந்த சந்திப்பை முழு முஸ்லிம்களும் எதிர்க்கின்றனர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் மறைத்துவிட்டு அரசியல் இலாபத்துக்காக மீண்டும் முஸ்லிம்களை வளைத்துப் போடுவதற்காக எடுக்கும் முயற்சியை இலங்கை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம்கள் அனைவரும் அவருடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்வதும், முஸ்லிம்களுக்கு எதுவித அநியாயங்களையும் செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க மஹிந்த முற்படுவதும் முஸ்லிம்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அளுத்கம கலவரம் உள்ளிட்ட பல அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்தும்கூட அதற்கு ஆகக் குறைந்தது வருத்தம்கூடத் தெரிவிக்காமல் எதுவுமே நடக்காததுபோலும்,

முஸ்லிம்கள் வேண்டுமென்றே மஹிந்தவை ஆட்சியில் இருந்து கவிழ்த்தனர் என்பது போலும் மஹிந்த நடந்துகொள்வதையிட்டு முஸ்லிம்கள் மேலும் கவலையடைந்துள்ளனர்.

தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றிபெறும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்ததால் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றுப்போன மஹிந்த மீண்டும் முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதற்காக அவர் சில முஸ்லிம்களுடன் பத்தரமுல்லையில் சில தினங்களுக்கு முன் சந்திப்பொன்றை நடத்தினார்.

இது தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் கவலையடைந்துள்ளனர். சிறுபான்மை இன மக்கள் இல்லாது தேர்தலில் வெல்ல முடியாது என்பதை இப்போது உணர்ந்துள்ள மஹிந்த, முஸ்லிம்களை அரவணைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

அதற்கு சில முஸ்லிம்களும் துணைபோயுள்ளனர். இது முழு முஸ்லிம்களையும் சீற்றம்கொள்ளச் செய்துள்ளது.

2013 முதல் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள் தொடங்கின. ஹலால் எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி அளுத்கம எரிப்புப் போராட்டத்தில் அது முடிவடைந்தது.

முஸ்லிம் பெண்கள் அபாயா, புர்கா அணிய முடியாத நிலை ஏற்பட்டது. மத்ரஸாக்கள் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பயிற்சி முகாம்களாகச் சித்திரிக்கப்பட்டன.

பள்ளிவாசல்கள் கல்வீச்சுக்களுக்கு இலக்காகின. வடக்கு – கிழக்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடும் சதிகள் அரங்கேறின, முஸ்லிம்களின் வர்த்தகத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டது.

இறுதியில் இனக்கலவரங்கள் மூலம் முஸ்லிம்களை அழிக்கும் சதித் திட்டத்துக்கு அளுத்கம, தர்கா நகர் முஸ்லிம்கள் பலியாகினர்.

மேலும் பல இடங்களுக்கு கலவரங்கள் பரவுவதற்கு முன் மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்து விட்டது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்ததன் மூலம் மஹிந்தவின் பதவி கவிழ்ப்பு சாத்தியப்பட்டது.

சிறுபான்மை இன மக்கள் இல்லாமல் அரசியலில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த மஹிந்த, இப்போது முஸ்லிம்களை நாடத் தொடங்கியுள்ளார். அதன் முன்னோடியாகவே முஸ்லிம்கள் சிலரை சந்தித்துப் பேசியுள்ளார்.

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்துள்ள முஸ்லிம்கள், மஹிந்தவின் இந்த நகர்வையும் அதற்கு முஸ்லிம்களில் சிலர் துணை போவதையும் எதிர்த்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW