ஷரீஆ சட்டம் தொடர்பில் முஸ்லிம்கள் அஞ்சத்தேவையில்லை – அமைச்சர் ஹலீம்
நமது நாட்டின் இன்று எழுந்துள்ள முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம் தொடர்பாக இலங்கை முஸ்லிம்கள் எவ்வகையிலும் அஞ்சத்தேவையும் இல்லை சரிஆ சட்டத்திற்கு முரணாக திருத்தங்கள் கொண்டு வர எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் இடம்கொடுக்கப் போவதில்லை. சர்வதேசத்தில் எழுகின்ற சட்ட திட்ட மாற்றங்களுக்கு ஏற்ப சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்த்தால் முன்வைக்கப்பட்ட பிரரேரணைக்கு சரிஆ சட்ட வரையறைகளை மீறி எந்தவொரு திருத்தச் சட்டங்களும் இடம்பெறாது. சில குறுகிய நோக்கம் கருதி இதனைப் பெரிது படுத்தி அரசியல் இலாபம் தேடுவதில் எந்தவிதமான அர்த்தமுமில்லை என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம் தெரிவித்தார்.
சர்வதேச நியம ஒழுக்க விதிமுறைகளுக்கு ஒத்திசையாத முஸ்லிம் விவாக. விவகாரத்துச் சட்டம் தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச் ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
இந்த விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மிய்யதுல் உலமா மற்றும் ஏனைய நிறுவனங்களும் ஒன்றிணைந்து சரிஆவுக்கு முரணாக திருத்தங்களைக் கொண்டு வர இடமளிக்கமாட்டோம் என்ற ஒர் உறுதியான கருத்தை சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் முன்வைக்கவுள்ளோம்.
இஸ்லாமிய சரிஆ சட்டத்தின் படி பருவ வயதை அடைந்த பெண்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கலாம் என்று அமைந்துள்ளது. தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் 12 ,18 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளுக்கான திருமணங்கள் இடம்பெறுகின்றன. இந்த விவகாரம் குறித்தும் கவனம் செலுப்பட வேண்டும்.
ஆனால் முஸ்லிம் பெண் பிள்ளைகளின் திருமணத்தை பெற்றோர்களே தீர்மானித்து திருமணம் முடித்து வைக்கின்றார்கள். பருவ வயதை அடைந்திருந்தாலும் திருமண வாழ்க்கைக்குரிய தகுதியயான நிலையின் பின்னரே தம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் தற்போது எமது நாட்டு விவாக, விவாகரத்து சட்டம் திட்டத்தில் சரிஆவுக்கு முரணான சில அம்சங்களும் உள்ளன. திருத்தப்பட வேண்டி சட்ட ஓழுங்களும் உள்ளன. கைக்கூலி வாங்கும் விடயம் உள்ளது. இது எமது சரிஆ சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட விடயமல்ல. இது போன்ற திருத்தப்பட வேண்டிய பிழையான ஷர்த்துக்கள் சில உள்ளன. இதன் காரணமாக 2009 ஆம் ஆண்டு மிலிந்த மொரகொட நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதியரசர் சலீம் மர்சூக் தலைமையிலான குழுவினர் சரிஆ திருத்த சட்டக் கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இஸ்லாமிய சரிஆ சட்ட திட்ட முறைக்கு ஒத்திசையாத விடயங்களை அகற்றி ஒரு வலுவான சட்டமாக்கும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பு எமக்கு உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.