மைத்ரி அரசில் இனவாதம்: கருவிகளும் காரணிகளும்

இலங்கையில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக தலைவிரித்தாடி வரும் இனவாதத்துக்குக் கடிவாளமிடும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உள்ளது.
இனவாதத்தை ஊக்குவித்து வளர்த்த ஒரு தலைவன் மேல் மக்கள் கொண்ட வெறுப்பின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக மைத்ரிபால சிறிசேன எனும் மாற்றுத் தெரிவை, கேள்வி கணக்குகளுக்கப்பால் மக்கள் தெரிவு செய்தனர். பொது வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன அறிமுகப்படுத்தப்பட்ட போது அவரது 48 வருட அரசியல் அனுபவம் என்கிற தகைமை இருந்த போதும் போதியளவு பிரபல்யம் இருக்காத காரணத்தினால் சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் யுத்தத்தை நிறைவு செய்த தகைமையோடும் மீண்டும் போட்டிக் களத்தில் குதித்த மஹிந்த ராஜபக்ச குறைத்தே மதிப்பிட்டார்.
மைத்ரியின் வெற்றி
ஆனாலும் மக்கள் முடிவெடுத்தனர். அந்த முடிவில் முஸ்லிம் – தமிழ் மக்களின் கோபமும் வாக்குப் பலமும் பேசப்படும் அளவுக்கு சிங்கள மக்களின் மாற்றம் வேண்டிய வேட்கை இன்னும் தான் பேசப்படவில்லை. கணிசமான சிங்கள மக்கள் மஹிந்தவின் சர்வாதிகாரத்தினால் வெறுப்படைந்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குப் பலம், சிறுபான்மையினரிடம் எதிர்பார்க்கப்பட்ட மனமாற்றம் உட்பட, வெற்றி பெறுவதற்கு மைத்ரிக்குத் தேவைப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கள் உருவான அதிர்வலை போதுமாக இருந்தது.
அதுவரை அண்மைக்காலத்தில் இலங்கையில் இனவாதத்தை உருவாக்கியதில் பங்குள்ள ஜாதிக ஹெல உறுமய கூட கடைசி நேரத்தில் ஆட்சியில் பங்கெடுக்க வந்த முஸ்லிம் காங்கிரசைக் காப்பாற்ற, அவர்களது கரையோர மாவட்ட வியாபாரப் பொருளை கிராமிய சிங்கள மக்களிடம் வேறு வகையில் எடுத்துரைத்து பதட்டத்தைத் தணிக்க பெரும்பாடு பட்டது.
எனவே, இலங்கையில் இனவாதம் என்பது அரசியல் கலப்பற்ற ஒன்று என்பதற்கு இதையே உதாரணமாகக் கொள்ளலாம்.
இனவாத அரசியல்
இவ்வாறு அரசியல் கலப்பிலேயே வக்கிரமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்தினை சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்தும் எதிர் சக்திகளின் தேவை அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்கும் என்பதை இதனடிப்படையில் மறுக்க இயலாது. இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச எதைச் செய்தார் என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினரிடம் வலுவான ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. பொது பல சேனா அமைப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது போன்ற ஓரளவு சுதந்திரம் முஸ்லிம் சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அமைப்பொன்றுக்கும் வழங்கப்பட்டிருந்தது தொடர்பிலான சந்தேகம் தான் அது.
அரசியல் ரீதியாக, அஸ்வர், சத்தார் உட்பட பேருவளையிலேயே ஆதரவுக்குரல் கொடுக்க ஆளிருந்த போதிலும் நவீன பௌத்த காவலராகத் தன்னை சித்தரிக்க முனைந்த மஹிந்தவுக்கு அது போதமானதாக இருக்கவில்லை. இதனால் சிவில் சமூகத்துக்குள் மாற்றுக் கருத்துக்கள் மூலம் ஏதோ ஒரு பிரிவினரை இலங்கையில் ‘ஆபத்தான’ கூட்டாமகக் காட்ட வேண்டும் என்பது அரசியல் திட்டம்.
அதிர்ஷ்டவசமாக ஜமாத்தே இஸ்லாமி அதிலிருந்து தப்பிக் கொண்டது எனலாம். மாதம்பை விவகாரத்துக்கு மேலும் ஒரு மாற்றுப் போராட்டத்திற்கு செல்ல விளைந்திருந்தால் அநத அமைப்பினரைக் கொண்டே நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதோடு விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும் என்பது என் கணிப்பு.
மதிப்பிழந்த மனிதநேயம்
எனினும் ஜம்மியா கையைச் சுட்டுக்கொண்ட போதிலும் அதற்குப் பகரமாக கை கொடுக்க நாமிருக்கிறோம் என தவ்ஹீத் அமைப்பு மேலதிகமாக மஹிந்த ஆதரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடாத்தி, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது யுத்தத்தில் நிகழும் சாதாரண நிகழ்வுதான் என ஜெனிவாவில் ஜம்மியா கை கொடுத்ததை விட மேலதிகமாக மனித உரிமைகள் பேரவை தீர்மானம் வரவிருந்த நேரத்தில் தமது விசுவாசத்தைக் காட்டியது. மறுபக்கத்தில் அங்கு முஸ்லிம்களாக இருந்தும் மனிதநேயத்துக்காகக் குரல் கொடுக்கத் தவறியிருந்தது.
இந்த நேரத்தில் இலங்கையின் இனவாத அரசியல் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தில் தேவையான ‘தெரிவுகள்’ உருவாகியிருந்தது என்றால் மிகையில்லை. இவ்வாறான தொடர் பின்னணியில் கட்டி வளர்க்கப்பட்ட இனவாதம் ஒன்றே மஹிந்தவின் எதிர்கால அரசியலின் அத்திவாரம் எனவே தொடர்ந்து நம்பி வரும் மஹிந்த ராஜபக்ச, மைத்ரி அரசும் சிறுபான்மையினருக்கு எதிரானது என ஒப்புவிக்கும் கடமைப்பாட்டில் சில நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் அதற்கு உரம் சேர்க்கும் வகையில் விஜயதாச ராஜபக்ச தனது பேச்சு மூலம் முதற் கதவைத் திறந்து வைத்தார்.
புதிய சூழ்ச்சி
இதன் பின்னணியில் மாளிகாவத்தையிலும் – புறக்கோட்டையிலும் இம்மாதம் நடந்தேறிய சம்பவங்களும் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் பங்கெடுக்கும் ஒருவர் திடீரென அசுர வேகத்தில் பிரபல்யம் பெற்று தூங்கிக் கொண்டிருந்த இனவாதத்தைத் தட்டியெழுப்பியதும் மைத்ரி அரசுக்கு வந்த மிகப் பெரும் தலையிடிகள்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததிலிருந்து எப்போதும் ‘திட்டமிடலால்’ மஹிந்தவின் சூழ்ச்சிகளை முறியடித்த மைத்ரி அரசு இங்கும் அதனையே கையாண்டு, இந்தியாவிலிருந்த ஞானசாரவை வரவழைத்தது. ஜனவரி கைதின் பின்னரே ஞானசாரவின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பமாகியிருந்தது. வெளியில் வந்த ஞானசாரவின் நடவடிக்கைகளை ஜெயிலுக்குப் போக முன் – பின் என இரு அத்தியாயங்களாகப் பிரித்துப் பார்த்தால் பல விடயங்களை உணர்ந்து கொள்ளலாம்.
மைத்ரி – ரணில் கூட்டரசின் முறியடிப்புத் திட்டங்களுக்கு உதாரணமாக மூன்று விடயங்களை முன் வைக்கலாம்.
முறியடிப்புக்கான கருவி
முதலாவது, 100 நாள் அரசில் பிரதமர் நியமனம், இரண்டாவது நீதியரசர் நியமனம், மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவர் நியமனம். இந்த மூன்றுக்கும் பின்னாலுள்ள விடயங்களை வேறொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் முடிந்தவர்கள் அவற்றின் பின்னணியை சிந்தித்துப் பாருங்கள். இந்த வழி முறையிலேயே இம்முறையும் ஞானசாரவையே பயன்படுத்தி 19ம் திகதியை முன் வைத்து நகர்த்தப்பட்ட இனவாத திட்டம் தவிடு பொடியாக்கப்பட்டது.
அது மேலும் வளராது என்பதற்கோ அல்லது திரும்பவும் மாற்றுத் திருத்தங்கள் வராது என்பதற்கோ உத்தரவாதமில்லாத நிலையில் ஞானசாரவையே முன் நிறுத்தி பௌத்தசாசன பாதுகாப்புக்கான அமைப்பொன்றும் இப்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பு மஹிந்த தரப்பிலிருந்து அவ்வப்போது எட்டிப்பார்க்கும் இனவாதத்தைக் கட்டுப்படுத்தினாலும் ஏலவே மைத்ரி தரப்பில் அரசியல் காரணங்களுக்காக அடங்கியிருக்கும் இனவாத சக்திகளைத் தொடர்ந்தும் அமைதியாக வைத்திருக்குமா என்பது கேள்விக்குறியாகும்.
எதிர்கால ஆபத்து
அந்த சக்திகள் மஹிந்த எதிர்ப்பு அரசியலுக்காக மௌனம் காக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றது போன்று மஹிந்த ஆதரவு இருந்தும் அதை வெளிக்காட்ட முடியாத ‘அதிருப்தி’ சக்திகளும் மைத்ரி அரசில் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த சக்திகளின் கூட்டை ரணில் முன்னெடுத்துச் செல்லும் வேகமான அபிவிருத்தி நடவடிக்கைகள் சிந்திக்க இடம்கொடுக்காது அடக்கிக் கொண்டிருப்பதால் அவை மீளவும் எழாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் பதவிப் போட்டி, ஆளுமைப் போட்டி மலிந்து இருப்பதனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசியல் சக்திகளின் இனவாத கொள்கைத் திட்டங்களுக்குத் துணை போகக் கூடிய கருவிகள் இனியும் எங்கள் சமூகத்தில் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இன்றைய சூழலில் இனவாத தீ அடக்கப்பட்டிருக்கிறதே தவிர, அணைந்து போக வில்லை. எனவே, நமது நிலைப்பாடுகளை மீளாய்வு செய்து அடுத்தடுத்து வரப்போகும் சவால்களுக்குத் தயாராக வேண்டும்.
-இ.ஷான்