இனவாதத்துக்கு எதிராக உடன் நடவடிக்கை: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
நேற்றிரவு இரவு 8 மணி முதல் 10 மணி வரை இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வைத்தே இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ள ஜனாதிபதி, முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறு தனது செயலாளருக்கும் இதற்கெதிரான புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்குமாறு நீதியமைச்சருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என இதன் போது நீதியமைச்சர் தெரிவித்த அதேவேளை, புதிய சட்டம் வரும்வரை காத்து இருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி பொலிஸ் மாதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதூதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்த்தன, எம்பி ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், போலிஸ் மாதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்துக்கொண்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.