காத்திருக்கும் கைது; நழுவிச் செல்லும் ஞானசார

இனமுறுகலைத் தூண்டுவோரைக் கட்டுப்படுத்தும் குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசேட நடவடிக்கையில் எதிர்பார்த்தது போல் சிக்காது நேற்று முன் தினம் முதல் நழுவிக் கொண்டிருக்கிறார் ஞானசார.
சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தனது எஜமானர் மஹிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றக் கிளம்பிய ஞானசாரவுக்கு கிறிஸ்தவர்கள் பக்கமிருந்து முஸ்லிம்கள் பக்கம் பார்வையைத் திருப்புவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதிலிருந்து இலங்கை முஸ்லிம்களைக் கடுமையாகத் தாக்கி, அளுத்கம வன்முறைக்கும் வித்திட்ட போதிலும் மஹிந்த அரசின் வீழ்ச்சியின் பின்னும் பலவீனமான தேசிய அரசின் நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஞானசாரவின் நடவடிக்கைகள் தொடர்ந்தது.
எனினும், தமது ஆட்சியின் ஆரம்பத்திலேயே இனக்கலவரம் ஒன்று நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்த மைத்ரி அரசாங்கம் சிறுபான்மையினத்தவர் எவ்வகையிலுமே தொடர்பு படாத ஒரு சம்பவத்தில் ஞானசாரவை ஹோமாகமயில் அமுக்கிப் பிடித்து சிறையிலடைத்தது.
இலங்கையில் புதிதாகவே அறிமுகமான ஒரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஞானசாரவுக்குப் பிணை வழங்க மறுக்கப்பட்டதன் தாமதத்தில் ஞானசார அடங்கிப் போதலின் சூட்சுமமும் தங்கியிருந்தது என்றால் மிகையில்லை. ஜப்பானைத் தனது இரண்டாவது வீடாக உருவாக்கிக்கொள்ள விரும்பியிருந்த ஞானசாரவுக்கு அதற்கான கதவைத் திறந்து கொடுப்பதாக இருந்தால் ஞானசார அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை திணிக்கப்பட்டதும் அதற்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லாத ஞானசார அதன் படியே விடுதலை பெற்றதும் பெரும்பாலும் ஜப்பான், தென் கொரியா என சுற்றித் திரிந்ததும் நடைமுறையில் கணிப்பிடக்கூடியவை.
ஆனாலும், இன்னும் உறுதியான ஆட்சியை உருவாக்க முடியாது தடுமாறும் மைத்ரி அரசாங்கத்தின் பலவீனத்தை என்றாவது பயன்படுத்த நேரும் என்பதால் தனது ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த அவ்வப்போது தனது குரலை வெளிக்காட்டி, ஆனாலும் பிணை நிபந்தனைகளுக்குள் தனது பேச்சு சுதந்திரத்தைப் பாவிக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொண்டார் ஞானசார.
நவம்பர் 3ம் திகதி பி.ஜே.யின் இலங்கைக் கிளையினரால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எனும் நாணயத்தின் மறு பக்கம் டான் பிரியசாத்தாக உருவெடுத்ததோடு நிற்கவில்லை. டான் பிரியசாத்தைத் தலைவராகக் கொண்டு, ஞானசாரவை செயலாளராகக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கும் திட்டம் பற்றி தீவிர ஆலோசனையும் முகநூல் ஊடான கருத்துக் கணிப்புகளும் கூட இடம்பெற்றது. எனவே, மறுமுனையில் ஞானசாரவின் தொடர்பில்லாமல் டான் பிரியசாத் என ஒருவர் உருவாகவும் இல்லை, அப்படியொரு நபர் உருவாவதற்கான களம் மாளிகாவத்தையில் உருவாக்கப்படவுமில்லையெனவும் கணிப்பிடலாம்.
எனவே, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த காவற்துறை ஞானசார நாடு திரும்பும் நாளை இலக்காகக் கொண்டு மேலிடத்து அனுமதியுடன் டான் பிரியசாத்துக்கு வலை விரித்தது அதற்கேற்ப அன்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடுகள் சேகரிக்கப்பட்ட போது அதில் ஞானசாரவும் உள்ளடக்கப்பட்ட விடயம் முந்தைய பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனாலும், தனது ஆக்ரோசத்தை விட புத்தி சாதுர்யமாக நடந்து கொண்ட ஞானசார உடனடியாக வன்முறையில் இறங்கவோ வன்முறையை வேண்டியவர்களை ஆதரிக்கவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ இல்லாமல் மிகவும் நிதானமாக விமான நிலையத்தில் வைத்தே பொறுமையைப் போதித்ததன் மூலம் பொலிசாரின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அல்லது நகர்வு ஞானசாரவிடமும் இருந்தது புலப்பட்டது. எனவே, தேவைப்பட்டால் அடிப்போம், கொளுத்துவோம் என ஆசுவாசமாகப் பேசி தனது ஆதரவாளர்களை 24 மணி நேரம் காத்திருக்கச் சொல்லி அறிவுரை கூறினார்.
திட்டமிட்டபடி மறு நாள் ராசிக் கைது நிகழ்ந்ததால் ஞானசார ஊடான வன்முறைக்கு அவசியமில்லாது போனது. ஆனாலும், டான் பிரியசாத்தின் ஆதரவாளர்கள் அடுத்து ஞானசாரவின் தலைமையிலேயே நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதால் அவரின் அடுத்த நகர்வுக்காக பொலிசார் காத்திருக்க , நேற்று முன் தினம் கிருலபன சந்திப்பையும் அமைதியாகவே முடித்துக் கொண்ட ஞானசார நேற்றைய தினம் பிரியசாதின் பிரியர்களுடன் இடம்பெற்ற நிகழ்வையும் உரத்த குரலில் பேசி அடக்கி வைத்ததன் மூலம் நழுவிக் கொண்டார்.
இந்நிலையில் 19ம் திகதியன்று பௌத்தர்களின் ஒன்று கூடல் எனும் பெயரில் டான் பிரியசாத்தும் ஆதரவாளர்களும் பி.ஜே.யின் இலங்கைக் கிளையினருக்கு எதிரான வன்முறையில் இறங்கவோ அதன் மூலம் ஏனைய முஸ்லிம்களைக் குறி வைத்துவிடவோ கூடாது என்பதால் அத்திட்டத்தைத் தகர்ப்பதற்காக இயங்கிய குற்றத்தடுப்புப் பிரிவின் திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் அன்றைய தினம் அனைவரையும் ‘அதிஷ்டான பூஜை’க்கு அழைப்பு விடுத்து தன் மீதான பார்வையின் உக்கிரத்தைக் குறைப்பதற்கு ஞானசார குடும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்.
சூட்டைத் தணிக்கும் தேவை நிறைந்த இச்சூழ்நிலையில் 25ம் திகதி டான் பிரியசாத்துக்கும் 29ம் திகதி ராசிக்குக்கும் பிணை கிடைப்பது சந்தேகத்துற்குரியதாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. எனினும், இரு தரப்பும் முன் கூட்டியே மனுத் தாக்கல் செய்தாவது பிணையில் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இருப்பினும் ஞானசாரவோ சட்டம் இயங்கும் முறையொன்று இருக்கிறது, அதனைத் தாண்டி எதையும் செய்ய முடியாது என டான் பிரியசாத் ஆதரவாளர்களை ஆத்திரப்படுத்தி ஆசுவாசப்படுத்தியுள்ளார்.
ஜனவரியில் சிறையிலடைக்கப்பட்ட போது ஞானசாரவுக்காக இந்த நாடு கொதிக்கவோ, சிங்கள மக்கள் கிளர்ந்தெழவோ இல்லை. மாறாக சட்டத்துக்கு மதிப்பளித்தார்கள், நீதித்துறையின் கௌரவமும் உயர்ந்தது. எனவே, ஞானசார இனவாதம் பேசினால் இனி உடனடியாகக் கைது எனும் எதிர்பார்ப்பு முஸ்லிம்களிடையே மலர்ந்தது.
என்றாலும் கூட, வழக்கம் போல எதிர்பார்ப்பதோடு நின்று கொள்ளும் முஸ்லிம் சமூகம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஞானசாரவுக்கு எதிராக எந்த ஒரு முறைப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. டான் பிரியசாத் – அப்துல் ராசிக் கைதினை செவ்வனே நிறைவேற்றிய குற்றத்தடுப்புப் பிரிவு அதில் ஒருவரை அடுத்தவருக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டு தற்காலிக தீர்வுடன், ஞானசாரவை விழிப்புடன் கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில் பட்டியலில் இருந்த சுமனரத்ன தேரருக்கு சட்டத்தை மீறித் தானாக மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பொன்று ஞானசாரவுக்கு வழங்கப்பட்டது போன்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி அவர் சிறை செல்லப்போகிறாரா அல்லது பாடம் படித்த ஞானசாரவைப் போல் நழுவிக் கொள்ளப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எவ்வாறாயினும், பிஜேயின் இலங்கைக் கிளையான ஸ்ரீலங்கா தவ்ஹீத்துக்கு எதிரான நடவடிக்கை எனும் போர்வையில் அனைத்து முஸ்லிம்களுக்கும் இச்சக்திகள் ஆபத்தை உருவாக்கியிருக்கின்றன. அந்த ஆபத்தைக் காவல்துறை கையாள்வதற்கான விலையை முஸ்லிம் சமூகமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது, என்றாலும் மீண்டும் ஒரு அளுத்கம உருவாவதை அனுமதிக்க முடியாது என்பதால் தமது குறிக்கோளில் அரசாங்கம் தற்சமயம் உறுதியாகவே இருக்கிறது.
நமது பிரார்த்தனைகளை எல்லாம் வல்ல இறைவனிடமே முன் வைப்போம்!