நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன – அன்வர் முள்ளிநியூஸ்

நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன – அன்வர்



சிறுபான்மையின மக்கள் பல எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து மஹிந்த ராஜபக்சவின் அரசை கவிழ்த்து, தமது கலாச்சாரம் மற்றும் மதக் கொள்கைகளை புதியதொரு நல்லாட்சியை உருவாக்கி நம்நாட்டில் சம உரிமையாக வாழவேண்டும் என்ற பெரிய கனவுகளோடு வாக்களித்து கொண்டுவந்த ஆட்சியானது சிறுபான்மையினருக்கு கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய அதேவகையான அவலமே இன்னும் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டும் விஸ்வரூபம் கொண்டு ஆடுவது, கடந்த அரசுக்கும் இந்த நல்லாட்சி என்று பெயரளவில் சொல்லப்படுகின்ற அரசுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இதில் நாம் சொல்லிப் பெருமைப் படுவதற்கு ஒன்றுமில்லை என மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.

மேலும், இன்றும்கூட அதிகமாக முஸ்லிம்களின் கலாச்சாரம், மத ரீதியான நிந்தனைகள் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றது. இதை கண்டும் காணாதது போல் இந்த அரசு இருப்பது இந்நாட்டிலுள்ள முஸ்லிகளை அரசு கேவலப்படுத்துகின்றது என்பதை தவிர வேறொன்றுமில்லை. அண்மைக்காலமாக பொதுபலசேனா சட்டத்தை தனது கையில் எடுப்பதை நம்நாட்டிலுள்ள நீதித்துறை அதனை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பதையும் நாம் காணலாம்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஜனாசார தேரர் பகிரங்கமாக முஸ்லிம் தனியார் சட்ட மாற்றம் தொடர்பாக தனது பத்திரிக்கை மாநாட்டில்
முஸ்லிம்கள் அனைவரும் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டும் எனவும் தௌஹீத் ஜமாத்தினர் ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டிலுள்ள சிங்கள வாலிபர்களைக் கொண்டு விரட்டி அடிப்போம் என்றும் கூறி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்களின் புனித வணக்கஸ்தலமான பலஸ்தீனத்திலுள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பில் குறித்த பள்ளிவாசல் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற கருத்துக்கு இலங்கையின் மறைமுகமான ஆதரவு, இறக்காமம் மாணிக்கமடு பௌத்தர்கள் அற்ற பிரதேசத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம், அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலித் என்பவரின் வீடு அரிசிமலை பௌத்த பிக்குவின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட ராவணபலய சிங்கலே போன்ற பௌத்த பிக்குகள் அடங்கிய காடையர்கள் கூட்டம் வீட்டை தாக்கியமை, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி கொலை செய்யப்பட்டமை மற்றும் முஸ்லிம் பெண்களின் முகத்திரை அடங்கிய ஆடை தொடர்பில் இனவாத கருத்துக்களை தொடர்ந்தும் வெளிப்படையாக தெரிவித்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினூடாகவும் செயல்படுவது நாலாட்சியின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கின்ற தருணமாக மாறிவருகின்றது.

நல்லாட்சி அரசு சட்டம் ஒழுங்கு என்ற விடயத்தை சிறுபான்மையினர் மீது மட்டும் அமுல்படுத்துவது பெரும்பான்மை பௌத்த பிக்குகளுக்கு சட்டத்தை உத்தியோகமற்ற போலீசாக செயல் பட கொடுத்திருப்பது இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக சிறு பான்மையினருக்கு விடிவில்லை என்பதை வெளிப்படையாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும் அடைக்களம் கொடுக்கின்ற தளமாக நல்லாட்சி அரசு தோற்றமளிக்கின்றது.

எனவே நல்லாட்சி அரசு முஸ்லிம்கள் விடயத்தில் கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையளிக்கின்றது. ஆனால் ஒருநாள் இறைவனின் தீர்ப்பு உண்டு அது இறுதியானதாக இருக்கும் அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழு தலைவருமான ஆர்.எம். அன்வர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி - அனுப்புனர்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW