காத்தான்குடியில் கடைகள் உடைக்கபட்டு கொள்ளை.

மட்டக்களப்பு - காத்தான்குடி நகரில் வியாழக்கிழமை இன்று (24) பலசரக்குக் கடையொன்றும், தொலைத் தொடர்பு நிலையமும் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்திக்கு அருகில் சேர் றாசிக் பரீட் மாவத்தையில் அருகருகே அமைந்துள்ள மேற்படி இரண்டு கடைகளும் கூரையால் ஏறி உள்நுழைந்து திருடப்பட்டுள்தாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த கடைகளின் உரிமையாளர்கள் தமது கடைகள் இவ்வாறு உடைக்கப்பட்டு களவு போனது பற்றி பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
வழமை போன்று நேற்று இரவு 9 மணியளவில் கடைகளை மூடி விட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் கடையைத் திறந்து பார்த்தபொழுது, கடையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து கடையிலிருந்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.