சமூகங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்த இடமளிக்க முடியாது - சந்திரிக்கா முள்ளிநியூஸ்

சமூகங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்த இடமளிக்க முடியாது - சந்திரிக்கா


குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாட்டில் இடமில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலமாக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரணதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்த விடயங்கள் தமது அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் இவ்வாறான வெறுக்கத்தக்க கூற்றுக்களுக்கு கடுமையான அதிருப்தியை வௌியிட்டுள்ளனர்.

அவற்றுக்கு இடமளிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இத்தகைய யற்பாடுகளுடன் தொடர்புபட்ட தரப்பினரின் சமூக, அரசியல் மத பின்புலங்களை கவனத்தில் கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதிக்காது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விடுத்துள்ள அந்த அறிக்கையில்:

பல தசாப்தங்களாக ஏற்பட்ட அழிவுகளுக்கு பின்னர் நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு இவ்வாறான செயற்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன.

நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தை முதன் முதலில் சமகால அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது. இதற்காக அரசாங்கம், முறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டை நிர்வகித்தவர்களின் காலப்பகுதியில் சில தீய சக்திகளினால் இனங்களுக்கிடையே குரோதம் மற்றும் இனவாத போக்குகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. தற்போது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகளுக்கு பல சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்ந்த செயல்திறன்மிக்க நேர்மையான அரசாங்க நிர்வாக முறையொன்று நாட்டிற்கு அவசியம்.

வெறுப்பு மற்றும் குரோத செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற தீய குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குடியியல் சமூகம் மற்றும் மதத் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை வரவேற்கின்றோம்.

குறுகிய இனவாத கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையையும் வரவேற்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW