அமைச்சரவையில் தவ்ஹீத் ஜமாத் பற்றி பேச்சு - முஸ்லிம் தீவிரவாத குழு என்கிறார் மங்கள சமரவீர

முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சமகால பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் அமைச்சர்களினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் பௌத்த தீவிரவாதமும், முஸ்லிம் தீவிரவாதமும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில்
‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டுவந்த பௌத்த தீவிரவாத குழுக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
அதேபோன்று இதற்கு ஏட்டிக்குப் போட்டியாக ஒரு முஸ்லிம் தீவிரவாத குழுவும் இறங்கியுள்ளது. இக்குழுக்கள் அரசின் ஸ்திரத்தன்மையை இல்லாமற் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
ஒரு முஸ்லிம் தீவிரவாத குழு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளது. அரசுக்கு விரோத அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. இக்குழுக்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றார்.
இதேவேளை இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகையில்,
வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்ட முஸ்லிம் அமைப்பில் எமக்கும் உடன்பாடில்லை, ஆர்ப்பாட்டங்களையும் அறிக்கைகளையும் இந்தச் சூழ்நிலையில் அங்கீகரிக்க முடியாது. குறித்த முஸ்லிம் அமைப்பின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கிறோம். இன்று (நேற்று) அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் என்றார்.
ARA.Fareel