ஹக்கீம் விலை போய்விட்டார்: SLTJ குற்றச் சாட்டு

இலங்கையில் இயங்கும் சிங்கள கடும்போக்கு இனவாத அமைப்பு பொது பல சேனா எவ்வாறு மஹிந்த – கோத்தா அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக உருவாக்கப்பட்டதோ அதே போன்றுதான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பும் மஹிந்த அரசினால் கையாளாக உருவாக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்ததன் மூலம் அவர் எதற்கோ விலை போய் விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஸ்ரீலதஜ அமைப்பின் துணைத்தலைவர் எம்.டி.எம். பர்ஸான்.
கட்டார் சென்றிருந்த வேளையில் அங்கு மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம் இது குறித்து தெரிவித்த கருத்துக்கள் ராஜித இங்கு தெரிவித்தது போன்றே அமைந்திருந்ததாகவும் குறித்த நபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை 2014ம் ஆண்டு ரவுப் ஹக்கீம் நீதியமைச்சராக பதவி வகித்த போது அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையிடம் இலங்கையில் நிலவும் இனவாத வன்முறைகள் தொடர்பில் கையளித்த அறிக்கையிலேயே நாட்டில் ‘இஸ்லாமிய அடிப்படைவாத குழு’ ஒன்று இயங்குவதாகவும் குறித்த குழுவினர் பொத்துவில் பகுதியில் சூபிஸ கொள்கையாளர்களின் தளம் ஒன்றை உடைத்த சம்பவத்தை ஆதாரங்காட்டி பட்டியலிட்டிருந்தார்.
இந்நிலையில் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை ரவுப் ஹக்கீமும் இது குறித்து மீண்டும் பேசியுள்ள நிலையில் அவர் விலைபோயுள்ளதாக குறித்த அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளமையும் கோத்தபாயவின் கீழ் இயங்கி வந்த உளவு மையத்துக்கு (NIB) தகவல் வழங்கியிருந்தாலும் கூட அரசோடு இணைந்து இயங்கியது தவறில்லையெனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கைகளைத் தூண்டியமை மற்றும் பொது பல சேனா எனும் அமைப்பை உருவாக்கியமை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என பரவலான நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Inas M.