ACJU மீதான எதிர்பார்ப்புகளும் பொறுப்புகளும் (கடிதம்)
கால மாற்றத்திற்கேற்ப நிகழும் சமூக மாற்றங்களுக்கு அச்சமூகத்தை வழி நடாத்துபவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்தும் உலமாக்கள் சங்கமிக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் காலத்துக்கு ஏற்ற செயற்பாட்டு மாற்றங்களைக் காண வேண்டிய சூழ்நிலைக்கு கடந்த 2013ம் ஆண்டு முதல் தள்ளப்பட்டது என்றால் மிகையாகாது.
சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் தகவல் பரிமாற்ற வேகமும் விளைவும் கூடவே வளர்ந்து நிற்கிறது. அதன் தாக்கங்களுக்கு ஏற்ப செயற்பாட்டு வேகமும் சிந்தனை வடிவ மாற்றமும் அவசியப்படுகிறது என்பதை அவ்வப்போது நிகழ்ந்த சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன. உலமாக்களின் ஒன்றியமாக இயங்கும் ஜம்மியத்துல் உலமா சந்திக்கும் அரசியல் நெருக்குதல்கள் மற்றும் சவால்களுக்கு அப்பால் காலத்திற்கேற்ற செயற்பாட்டு வேகம் சமூக மட்டத்தில் எதிர்பார்க்கப்படுவதை இன்றும் நாளையும் இன்னும் சில நூற்றாண்டுகள் கழிந்தும் கூட தவிர்க்க முடியாது.
சுதந்திரமான செயற்பாட்டுக்கு அரசியல் நெருக்குதல்களுக்கு அப்பாற்பட்ட சுயாதீனமான அமைப்பாக ஜம்மியத்துல் இயங்க வேண்டிய கட்டாயம் ஹலால் சான்றிதழுக்கு எதிரான சிங்கள கடுமபோக்கு இயக்கங்களின் செயற்பாட்டிலிருந்து உணரப்பட்டது. அந்தத் தேவையை நிறைவேற்றப் போகிறோம் என சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு சபைகள் ஆரம்பித்தவர்கள் கூட நாளடையில் ஜம்மியத்துல் உலமா செய்யும் பணியை திருப்பிச் செய்யும் அமைப்பாக தம்மை மட்டறுத்து, உழ்ஹியா வழி காட்டல், நோன்பு வழிகாட்டல் என சம்பந்தமில்லாத பாதையில் அல்லது இருக்கும் ஒற்றை வழிப்பாதையைப் பிளந்து செயற்படும் வழிமுறையையே கையாண்டன.
இவற்றிற்குப் பின்னணியில் இலங்கை முஸ்லிம்களிடையே தலை விரித்தாடும் ‘இயக்க’க் கொள்கைகள் காரணமாக இருக்கின்றன. இந்த நிலையில், துடிப்பான இளைஞர் சமுதாயத்திற்கு முறையான வழிகாட்டும் பணியையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவே பொறுப்பேற்றாக வேண்டும் எனும் தார்மீகக் கடமை புறக்கணிக்கப்பட்டதா எனும் கேள்வியும் எழுந்து நின்றது. அதன் மூலம் மேலும் சில சந்தர்ப்பவாத சக்திகளை அதன் இடைவெளியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வழி காட்டுவதாகக் கூறி பெரும்பாலும் வழி கெடுத்தே வைத்திருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு வீரம் எத்தனை அவசியமோ அதே போன்று விவேகமும் நாகரீகமும் இன்னும் அவசியப்படுகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் உலமாக்களை தூசனத்தால் வைதல், கண்ணியக்குறைவாக பேசுதல் முதல் இயக்கவெறிப் பேச்சுக்கள் என இளைஞர் சமூகத்தின் ‘வழி’ வேறு வகையில் வழி நடாத்தப்பட்டுக்கொண்டு வருகின்றது. கையில் ‘மைக்’ கிடைத்த பாவத்துக்கு பிரசங்கம் செய்பவர்கள் இலங்கையின் 2500 வருட ஓரிறைக் கொள்கையாளர்களின் வரலாற்றில் கண்டிராத வடிவத்தில் சந்திகளில் நின்று ‘இஸ்லாமிய’ போர்வையில் வெறுப்பையும், தூசன நடைமுறையையும் வளர்த்து வருகின்றனர்.
40 வயதுக்குட்பட்ட அவர்களால் அதற்கு முன் ஆகக்குறைந்தது 2460 வருடங்கள் இந்நாட்டில் ஓரிறைக் கொள்கையாளர்கள் எத்தனை கண்ணியத்துடனான பரிணாமத்தில் வாழ்ந்து வந்தார்கள், 9ம் நூற்றாண்டின் பின் இஸ்லாமியர்களாகத் தம்மை விரும்பி மாற்றிக்கொண்ட அதே கொள்கையாளர்களின் வாரிசுகள், பரம்பரையினர் இன்றைய சிங்கள கடும்போக்குவாதிகளை விட மோசமான, உக்கிரமான போர்ச் சூழலிலும் சதிகார மன்னர்களின் சூழ்ச்சிகளின் போதும் இந்த சமூகத்தின் இருப்பையும் வளர்ச்சியையும் எவ்வாறெல்லாம் காப்பாற்றிக் கொண்டார்கள் என்பதையும் இன்று மலிந்து போயிருக்கும் வீராவேச நடைமுறைகள் அலசிப் பார்ப்பதில்லை, மாறாக அது கோழைத்தனம் என இட்டுக் கட்டுகிறது.
இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் தேவை உலமாக்களின் சபைக்கு இல்லையென்றாலும் கால மாற்றத்தின் தேவையறிந்து செயற்படும் வேகம் அவசியப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் சிறிய அளவினரைத் திருப்திப் படுத்தும் வகையிலான நெருக்கமான உறவு போதுமானதன்று. பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் எமது சமூகத்தில் எல்லாப் பிரிவையும் அணுகியும் அரவணைத்தும் செல்ல வேண்டிய தேவையுள்ள சபை என்பதால் சமூக மட்டத்தில் நிலவும் கொந்தளிப்பு மற்றும் தேவையறிந்து செயற்படும் நுணுக்கமும் அவசியப்படுகிறது. ‘அவர்கள்’ அப்படித்தான் என ஒரு சாராரை கைவிடுவது ஜம்மியாவுக்கு இருக்கும் தெரிவு இல்லை.
அவ்வாறான ஒரு முடிவு அந்த ஒரு சாரரை, அது யாராக இருந்தாலும், அவர்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அரசியல் ஆட்சி மாற்றம் இன்று புடம் போட்டுக் காட்டியிருக்கிறது. அது தனியொரு சாராரின் குற்றமன்று, அனைத்தையும் சம அளவில் கையாளும் பரிணாமத் தேவையின் குறைபாடாகவும் பார்க்கக்கூடிய ஒன்றாகும். முன்னொரு காலத்தில் போன்று குத்பா பிரசங்கங்களை மாத்திரம் கால் மடித்துக் கேட்டு வளரும் தலைமுறை இப்போதில்லை.
சமூக வலைத்தளங்களில் உலவும் வீடியோக்களின் மூலம் கணப்பொழுதில் முடிவெடுக்கக் கூடிய, அதுவே சரியென இயங்கக்கூடிய வேகமான தலைமுறை. இந்தத் தலைமுறையைக் கையாள ஜம்மியாவின் செயற்பாடு தற்போதைய நிலையில் போதுமானதாக இல்லை, அதுதான் உண்மை.
இது வெறும் குறைபாடாக மாத்திரம் இருக்க முடியாது. ஏனெனில் மனிதவளம் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சர்ச்சைகள் ,அனர்த்தங்கள் வந்ததும் திடீரென வலுப்பெறும் உணர்வின் விளைவில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாய்ந்தோடி இணைந்து கொள்ளும் இளைஞர் சமுதாயம் தொடர் இயக்கத்தில் ஜம்மியாவின் மனித வளக்குறை பாட்டைத் தீர்ப்பதற்கும் பங்களிக்க வேண்டும். அதில் தாமறிந்த குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி நிற்பதை விடுத்து பரந்து பட்ட சிந்தனைப் போக்கை ஜம்மியாவம் கையாள வேண்டும். இது நாளைய சமூகத்தின் எதிர்காலத்தை வளப்படுத்த எம் சமூகத்துக்குத் தேவையான அடிப்படைச் செயற்பாடுகளில் ஒன்றெனலாம்.
இன்று மீண்டும் பொது பல சேனாவின் கடிதமும் அதை வைத்து மேற்கொள்ளப்படும் மலினமான பிரச்சாரங்களும் துணைபோகும் விளம்பரப் பிரியர்களும் இன்னும் சில செய்திகளை எடுத்துச் சொல்கின்றனர். அவற்றைப் புறக்கணிப்பதை விட கையாள்வதன் மூலம் ஜம்மியா செய்ய வேண்டிய பணிகள் நிறைந்திருக்கின்றன. பதில் தருகிறோம் எனும் பதிலை விட பதிலே அவசரமாக சென்றிருக்க வேண்டும் என விரும்பும் இளைஞர் சமுதாயத்தின் எண்ணத்தை வெறுமனே புறக்கணித்து விட முடியாது.
காரணம், அவ்வாறு எதிர்பார்த்து ஏமாறுவோரை மிக இலகுவாக வசப்படுத்திக்கொள்ள ஏலவே பல மாயக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை வேறுபாடுகளை முழுமையாகக் களைய முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையை சந்தித்திருக்கும் இக்காலத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்தும் முக்கிய பொறுப்பையும் சேர்த்தே ஜம்மியா சுமக்கிறது.
விதண்டாவாதிகளைத் தோளில் சுமக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதற்கும் கோடிகளைக் கொட்டும் தொழிலதிபர்களும் ஒரு முகம் கொண்டவர்கள் இல்லையென்பதால் இவையனைத்திலும் அரசியலையும் சேர்த்தே கையாளும் தேவை அதிகரித்திருக்கிறது. இதற்கேற்ப செயற்பாட்டு வேகம் கொண்ட மாற்றத்தையும் நவீனத்தையும் உள்வாங்கும் திறனைக் கொண்டு இன்ஷா அல்லாஹ் எம் சமூகப் பரம்பலுக்கான சேவையைப் பலப்படுத்தும் பொறுப்பும் உணரப்பட வேண்டும், அது செயற்பாட்டிலும் வர வேண்டும்.