மைத்ரி அரசில் பொது பல சேனாவின் ‘ஊடல்’

நேற்று வரை ஆர்ப்பாட்டம்..அடங்காத்தனம்..ஆவேசம் என சுற்றித்திரிந்த பொது பல சேனா மைத்ரி அரசுடன் ஊடல் கொள்ள ஆரம்பித்து இணக்கப் போக்கில் பயணிக்கிறது.
பலருக்கு வியப்பு..முக்கியமாக சிறுபான்மை மக்களுக்கு சந்தேகம்!
நாளுக்கு நாள் வியப்பைத் தரும் விதத்தில் மைத்ரி அரசில் அருகில் அமர்ந்து தோள் சேர்ந்து பொது பல சேனா போன்ற கடும்போக்கு அமைப்பு இயங்க ஆரம்பித்திருக்கின்றமையை எளிதில் எடை போட முடியாது.. அதற்கு அவசரப்படவும் முடியாது!
ஆனால்..நாம் எதிர்பார்த்த அமைதியைப் பெற வேறு என்ன வழியெனும் முதற்கேள்விக்கு விடை காண வேண்டும்.
இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை பௌத்தவாதம் அவ்வப்போது ஓய்ந்தாலும் மீளவும் எழும்.ஏனெனில் அதைக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதைத் தவிர மாற்று வழி அறிந்த ஒரு தலைமுறை இன்னும் அரசியல் மேடைகளில் தோன்றவில்லை. ஏதோ ஒரு வகையில் தான் சார்ந்த இனத்தின் வாக்கைப் பெற்றுக்கொள்ள நிலவும் போட்டி நிலை தமிழ் – முஸ்லிம் சமூகத்தில் தொடர்வது போன்று சிங்கள சமூகத்திலும் தொடரப் போகிறது.
அதைத் தவறாகக் கையாண்ட மஹிந்த ராஜபக்ச தூக்கியெறியப்பட்ட போதிலும் அவரை ஆதரித்த பேரினவாதத்தின் நிழலிலேயே அவரும் அவர் சார்ந்தோரும் குளிர்காய்ந்து வருகின்றனர். இன்னும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மேலும் பல தசாப்தங்கள் இன்னுமொரு தலைமுறையின் மனதில் இனவாதம் விதைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வப்போது துளிர்விடும் இனவாதம் ஆட்சியை அசைத்துப் பார்த்த வரலாறு கடந்தே இன்றைய இலங்கை நடைபயில்கிறது.
மைத்ரி அரசும் அதற்கு விதிவிலக்கில்லை..ஆனால் சிறு மாற்றத்தோடு எதிரியின் ஆயுதத்தை சாதகமாக்கிக் கொள்ள எத்தனிக்கிறது நல்லாட்சி.
இனவாதம் ஒரு எல்லைக்குள் இருக்கும் வரைக்கும் தான் சர்வதேசம் மைத்ரி அரசின் தோழனாக இருக்கும். சர்வதேச உதவியும் ஒத்தாசையுமின்றி அடி கூட நகர முடியாமல் தத்தளிக்கும் மைத்ரி அரசைப் பொறுத்தவரை இரண்டு தெரிவுகளே உண்டு. ஒன்று.. இனவாதிகளைப் பிடித்து சிறையிலடைக்க வேண்டும் அல்லது அருகில் வைத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும்.
முதலாவதைச் செய்து இது வரை வெற்றி காண முடியவில்லை. ஏனெனில், அரசின் பலவீனத்தை நன்குணர்ந்துள்ள இனவாதிகளை இயக்கும் தீய சக்திகள் அதைப் பெருப்பித்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன் வரை இருந்த அமைப்புகளின் எண்ணிக்கை இப்போது பல மடங்காகியிருக்கிறது, புதுப்புது முகங்கள் உருவாகிக் கிளை விட்டு வளர்கிறது. தேர்தலை சந்திக்கவுள்ள மைத்ரியின் நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களையும் சமரசப்படுத்தும் நிர்ப்பந்தத்தில் இயங்குகிறது. இதுவெல்லாம் அரசியலின் கோணத்திலிருந்து நியாயமாகப் பட்டாலும் வேதனைக்கு முடிவு வேண்டி ஆட்சி மாற்றத்தின் பால் அணி திரண்ட சிறுபான்மை மக்களுக்கு இது நல்ல செய்தியாக இல்லை.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்க மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகம் அம்பிட்டிய சுமனரத்னவும் கலபொடஅத்தே ஞானசாரவும் திடீரென அரசின் செல்லப் பிள்ளைகளாக மாற்றப்படுவதை திடீரென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த ஊடல் காலப் போக்கில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளிலும் வாழ்வியலிலும் கை வைக்காத அளவில் தான் அந்த நம்பிக்கை துளிர் விடும்.
ஆனால், அதற்குக் கால எல்லை உண்டா என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வி.
மட்டக்களப்பு மக்கள் தன்னை தாயும் தந்தையுமாக மதிக்கிறார்கள் என்று திடீரென சுமனரத்ன செய்யும் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள காலமும் வரலாறும் அழிக்கப்பட வேண்டும். நாங்கள் நல்லவர்கள் என ஞானசார சொல்வதை நம்ப மீண்டும் இலங்கை வரலாறு மீள எழுதப்பட வேண்டும். அவை எதுவும் நடக்கப் போவதில்லை, ஆனாலும் நம்புவதைத் தவிர வேறு தெரிவையும் மைத்ரி அரசு நமக்குத் தரப் போவதில்லை.
வெறுப்பூட்டித் திரிந்தவர்களைப் பூட்டி அடக்கி வைப்பதே தம் மீது நம்பிக்கை வைத்த சிறுபான்மை மக்களுக்குச் செய்யும் கைமாறு என இன்று களமிறநங்கியிருக்கும் நல்லாட்சி, இரண்டு பக்கத்தையும் தடவிச் செல்ல முனையும் போது, முரண்டு பிடிக்கும் சமூகம் நாமில்லையென்பதால் விழிப்புடன் அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
சிவில் சமூகம் உறங்க முடியாத சூழ்நிலையிலேயே இந்த ஊடல் அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் இனரீதியான அரசியலை என்றோ ஒரு நாள் இல்லாதொழிக்கும் ரணில் விக்ரமசிங்கவின் முற்போக்கு சிந்தனையில் இதுவும் ஒரு அங்கம் என்பதால் அது நாளையே கை கூடினால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை.
இந்த நிலையில் திரளான சந்தையில் நின்று தனியாக எழுந்தால் எங்கள் கூக்குரலே இனவாதமாகிவிடும். முஸ்லிம் அரசியலின் மௌனத்தினால் மீண்டும் சிவில் சமூகமே அந்தப் பளுவையும் சுமக்கக் கடமைப்படுகிறது.
-இர்பான் இக்பால்