நல்லாட்சியிலும் தேடப்படும் நல்லவர்கள்! முள்ளிநியூஸ்

நல்லாட்சியிலும் தேடப்படும் நல்லவர்கள்!



மஹிந்த ராஜபக்ச பௌத்த பேரினவாதத்தின் மூலம் தன்னை நீண்ட கால ஆட்சியாளனாக மாற்றிக்கொள்ள முயற்சித்ததற்கான பக்க விளைவுகள் அளுத்கம அழிவு வரை நீடித்த நிலையில் நாட்டு மக்கள் விழித்துக்கொண்டார்கள்.


ஒரு சிலரைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் மாத்திரமே கொதித்தெழுந்தார்கள் என்பது வாதம். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி கோபமிருந்தது போன்று சிங்கள மக்களுக்கும் இருந்தது, அதை இப்போதைக்கு வேண்டுமானால் ஒதுக்கி வைப்போம், ஆனால் மறைத்து வைக்கக் கூடாது.



நண்பர் தயாசிறி ஜயசேகர இந்த வருடம் லண்டன் வந்திருந்த வேளையில் ஆற அமர நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில் இதை ஆணித்தரமாக சொன்னார். அதாவது.. மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கணிசமான சிங்கள மக்களும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார். ஐ.தே.க ஆதரவாளர்கள் மற்றும் மஹிந்த வெறுப்பாளர் வகையறாக்களை இதில் சேர்த்துக் கொள்வோமா?

சரி, இப்பேற்பட்ட மக்கள் மைத்ரி மேல் கோபமே கொள்ளமாட்டார்கள் என நினைத்திருப்பது மஹிந்த வைத்திருந்த நம்பிக்கையை மிஞ்சியதாகி விடும். திணிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அதை அனுபவிக்க வேண்டிய மக்களுக்கு அடிப்படையில் என்ன மாற்றத்தைத் தந்திருக்கிறது அல்லது தருகிறது எனும் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.. எனவே ஆங்காங்கே தூண்டிவிடப்படும் போராட்டங்களில் மீன்களாக சிக்கிக் கொள்கிறார்கள் மக்கள்.

இவற்றை விடுவோம், இது எந்த ஆட்சி வந்தாலும் அபிவிருத்தியடைந்த நிலை வரும் வரை நம் நாடு எதிர் கொள்ளப் போகும் பிரச்சினைகள் தான்.

முஸ்லிம் சமூகத்திலும் இன்று ஒரு வெறுமையும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. அந்த வெறுப்பின் எதிரொலியில் உலகமெங்கும் இந்த சின்னஞ்சிறு தீவின் நல்லவர்கள் தேடப்படுகிறார்கள்.

பேச்சுக்காக முகப்புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் கூட.. யாரோ ஒருவர் அதுவும் குறிப்பாக சிங்களவராக இருந்து நாட்டில் மூட்டப்படும் இனவாதத் தீக்கெதிராக ஐந்து நிமிடம் பேசி ஒரு வீடியோ வெளியிட்டால் அதை ஆசை ஆசையாக ஷெயார் செய்து தன் தேடலுக்குத் தற்காலிக விடை தேடுகிறார் அப்பாவிக் குடிமகன்.

பிரதமர் வாய் திறந்து பேச மாட்டாரா? மைத்ரி ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்க மாட்டாரா? அரசாங்கம் சீறிப்பாயாதா என வாக்களித்த ஒவ்வொரு சாதாரண குடிமகனின் மனமும் ஏங்கும் அளவுக்கு மீண்டும் இனவாதத்தைப் பேசும் சுதந்திரம் ஞானசாரவுக்கும் அவர் சார்ந்தோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சூழ்ச்சியைப் பொறுத்தவரை அது எதிரியின் ஆயுதத்தைக் கொண்டு பலம் சேர்க்கும் யுக்தியாக இருக்கிறது. காலா காலமாக காரண காரியங்கள் இன்றி வாக்களிக்காத மக்களாக இருக்கும் நம் எண்ணங்களுக்கு அவர்களை விட இவர்கள் சிறந்தவர்கள் எனக் காட்ட மஹிந்த ஆட்சியில் உலவிய அதே இனவாதிகள் அவசியப்படுகிறார்கள். ஆனால், மஹிந்த ஆட்சியில் அவர்கள் கைது செய்யப்படவில்லை, நாம் கைது செய்தோம். மஹிந்த கணக்கிலெடுக்கவில்லை நாம் உட்கார்ந்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசினோம் எனும் சமப்படுத்தல் நிலவி வருகிறது.



2015 மார்ச் லண்டன் வந்திருந்த ஜனாதிபதி, எம் மக்களின் உணர்வுகளை அறிந்து கொண்டு எமது சந்திப்பில் வைத்து ‘பொது பல சேனா’ நிராகரிக்கப்பட்ட அமைப்பு என்றார். ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை, இன்று பொது பல சேனா நிபந்தனையுடனாவது புத்துயிர் பெற்றுள்ளது.



சில வேளைகளில் இந்த நிலை நமக்கு வருவதேன்? நாம் என்ன தவறு செய்கிறோம் என சிந்திப்பதுண்டு. ஒவ்வொரு ஆட்சியாளரும் நம்மை ஏதோ ஒரு கட்டத்தில் ‘அடக்கி’ வைக்க முயற்சிக்கிறார்களே ஏன் என வினவிப் பார்ப்பதுண்டு. அரசின் மீது நம்பிக்கை வைத்தவுடன், எல்லாம் சற்றே அடங்கியவுடன் அடுத்த தடவை இனவாதம் ‘கொழுந்து’ விடும் வரையில் நாம் என்ன செய்கிறோம்? எதைச் செய்து இவர்களுக்கு ஒரு ஞானசார இருந்தால் தான் சரியென்கின்ற எண்ணத்தை ஆட்சியாளர்களுக்கு உருவாக்குகிறோம் என்றும் சிந்திப்பதுண்டு.

அவர்கள் நல்லவர்களோ இல்லையோ, இடைப்பட்ட காலத்தில் நாம் கட்டுக்கடங்காது போவதனால் நம்மைக் கட்டுப்படுத்த விளைகிறார்களா என்று மஹிந்த ஆட்சியில் இல்லாவிடினினும் நல்லாட்சியில் சிந்திப்பதில் நியாயமிருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், அந்த சிந்தனைத் தெளிவு யாருக்குப் பிறக்க வேண்டும் எங்கிருந்து இது ஆரம்பிக்க வேண்டும் எனும் கேள்வி தொக்கு நிற்கும்.

என்.ஜி.ஓக்களின் ஆளுமை கிறிஸ்தவ சமூகத்தை அழைத்துச் சென்ற பாதை வேறு, எமது சமூகத்தை இன்று அழைத்துச் செல்லும் பாதை வேறு. வெளிநாட்டு ஆளுமை கிறிஸ்தவ சமூகத்துக்குத் தரும் உத்தரவாதங்கள் வேறு, நமது இஸ்லாமிய நாடுகள் நம்மைப் பார்க்கும் விதமே வேறு.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு ஊடக அனுபவம், அதிலும் குறிப்பாக இந்த இனவாதத்துக்கெதிரான போராட்டத்தில் என் அனுபவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் தான் மஹிந்தவிடம் ‘இலங்கை முஸ்லிம்களுக்கு’ ஏன் இவ்வாறு நடக்கிறது என நேரடியாகக் கேட்டவர். பின் நாளில் அரபுலக கூட்டணி ஓ.ஐ.சி கடித எல்லையைத் தாண்டாது நிறுத்திக் கொண்டது. அரசியல் – பொருளாதார வரையறையைத் தாண்டும் சக்தியில்லாத அரபுலகம் நம்மை விடவும் பாய்ந்து விழுந்து கவனிக்க வேண்டிய ரோஹிங்ய மக்களையே கைவிட்டுத்தான் இருக்கிறது.

அப்படியாயின் நமக்கு எம்மாத்திரம்? அதை சிந்தித்துக் கவலைப்படுவதை விட இலங்கையர் எனும் பூர்வீக உரிமை கொண்ட நாம் சுயவிமர்சனம் செய்து கொண்டு இயங்க வேண்டிய காலம் இது. நமது சுயவிமர்சனம் நம்மைத் திருத்துவதற்காக இருந்தாலே போதுமானது. நமது சிவில் சமூக அமைப்புகள் சுயாதீனமாக இயங்குவதில் இருக்கும் அரசியல் ஆளுமைகள் களையப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும் கூட மக்களாகிய நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து எல்லைகளை வகுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம், அதுவும் மற்றவனை நோக்கி விரலை நீட்டாமல்…!

நல்லாட்சியிலும் நல்லவர்களைத் தேட விளைந்திருப்பது பின்னடைவல்ல.. எப்போதும் உறங்காத அரசியல் விழிப்புணர்வுடன் நாமும் நம் எதிர்கால சமுதாயமும் வாழ வேண்டியதன் படிப்பினை.. கைகளை ஏந்தி வல்ல நாயனிடம் துஆ கேட்போம்.. சிந்தனையை விருத்தி செய்து சதிகளை மதிகொண்டு வெல்ல ஒற்றுமையாய் அணி திரள்வோம்..!



நப்பாசையுடன்…
இர்பான் இக்பால்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW