உலக வங்கி குழுவினர் திருமலை விஜயம் முள்ளிநியூஸ்

உலக வங்கி குழுவினர் திருமலை விஜயம்


(இஹ்ஸானா பரீத்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் உலக வங்கியின் தெற்காசியாவுக்கான நடவடிக்கை அதிகாரி யரிஸ்ஸா லிங்டோஹ் சொம்மர், உலக வங்கியின் நகர அபிவிருத்தி தொடர்பான நிபுணர் ஜெஸிக்கா ரேஷல் மற்றும் பொருளாதார பேராசிரியர் ப்ரையன் எச் ரொபேர்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாண அமைச்சர்களாக எஸ். தண்டாயுதபானி, கே. துரைராஜசிங்கம், ஆரியவதி கலப்பத்தி, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின்போது அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நிதியுதவியுடன் உலக வங்கியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் நெல்சிப் திட்டத்தின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களின் கீழுள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் நெல்சிப் திட்டத்தினால் 25 உள்ளுராட்சி மன்றங்களின் பணிகள் நிறைவுற்றுள்ளமை தொடர்பிலும் மேலும் இந்தத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 41 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் முதலமைச்சர் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

கூடவே உள்ளுராட்சி மன்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக வருமானங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அதனூடாக உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணித் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் கைத் தொழிற் பேட்டைகளை அமைத்து அதனூடாகவும் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது தொடர்பான யோசனையொன்றையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வைத்தார்.

கிழக்கு மாகாணத்தின் உல்லாசத்துறையை மேம்படுத்துவதற்கு உல்லாசத்துறை தொடர்பான பயிற்சி நிலையமொன்றை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் விவசாயத்துறையின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் கிழக்கு மாகாண கல்வித்துறையை மேம்படுத்த உலக வங்கியினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அடுத்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவற்றை நீடிப்பதற்கான கோரிக்கைiயும் உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் முன்வைக்கப்பட்டது.

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படாமையினால் காணி அபிவிருத்தி போன்ற பல மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW