“ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்” எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா முள்ளிநியூஸ்

“ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்” எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா



ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டிரம்ப் அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

தேர்தலுக்கு முன் பிரச்சாரம் நடந்த போது ஹிலாரி அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பதவியில் இருந்த போது அரசு இ-மெயிலை உபயோகிக்காமல் தன் தனிப்பட்ட இ-மெயிலை உபயோகித்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஹிலாரியின் 6.5 லட்சம் இ-மெயில்கள் ஊடகங்களில் வெளியாகின. இது அவருக்கான வெற்றி வாய்ப்பை வெகுவாக குறைத்தது.

ஹிலாரியின் இ-மெயில்களை ரஷ்ய உளவுத் துறை ஹேக்கிங் செய்து விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்டிருக்கிறது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அண்மையில் குற்றம் சாட்டியது. இந்தக் கருத்தை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. போலீஸாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“ஜனநாயகக் கட்சியின் இ-மெயில் ஹேக் செய்யப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பொறுப்பேற்க வேண்டும். மேலும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு உதவவே புதின் இதை செய்துள்ளார். ஹிலாரியின் இ-மெயில் கணக்கு ரஷ்யர்கள் முலமாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவு துறை சமர்ப்பித்துள்ள அறிக்கை மீது நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்”என ஒபாமா கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். ‘புதின் தனிப்பட்ட முறையில் இந்த ஹேக்கிங்கில் சம்பந்தப்பட்டுள்ளாரா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “ரஷ்ய அரசின் உயர்மட்டத்தில் நடைபெறும் இம்மாதிரியான செயல்கள் புதின் கவனத்திற்கு செல்லாமல் நடைபெறாது.” என்று அவர் கூறினார்.

“ஜனநாயக கட்சியின் முக்கிய இ-மெயில்களை ரஷ்ய உளவுத் துறை திருடியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம்” என்றும் ஒபாமா கூறினார். இவ்வாறு கூறியுள்ள ஒபாமா, அதிபர் பதவியிலிருந்து விடைபெற இன்னும் ஒரு மாத காலம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW