பொதுபலசேனாவுக்கான பதில் கடிதத்தை ACJU நேரடியாக அனுப்பாது: இணையத்தில் வெளியிட தீர்மானம்
பொதுபலசேனா அமைப்பு குர்ஆன் அத்தியாயங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களைக் கோரி அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்துக்கான பதிலை நேரடியாக பொதுபலசேனாவுக்கு அனுப்பி வைப்பதில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது.
பொதுபலசேனாவின் கேள்விகளுக்கான பதில்களுடன் குர்ஆன் தொடர்பான மேலதிக விளக்கங்களையும் உலமா சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்திலேயே இத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பில் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தியை தொடர்பு கொண்ட வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘பொதுபலசேனா கடந்த மாதம் உலமா சபைக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்துக்கான பதில் பொதுபலசேனாவுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படமாட்டாது. உலமா சபையின் இணையத் தளத்திலேயே வெளியிடப்படும். அதன் பின்பு கேள்விகளுக்கான பதில்களும் தெளிவுகளும் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படும்.
பதில் கடிதம் தயாரிக்கப்பட்டு தற்போது மீள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக உலமாசபை உலமாக்களுடன் வெளியில் உள்ள உலமாக்களும் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பதில் கடிதத்தின் 95% மான பணிகள் பூர்த்தியாகியுள்ளது.
பதில் கடிதத்தை அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் உலமா சபையின் பதில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றார்.
(நன்றி – விடிவெள்ளி)