வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்.! முள்ளிநியூஸ்

வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்.!



வவுனியா, புதிய பஸ் தரிப்பிடத்தை மையமாகக் கொண்டு தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை அரச பஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பஸ்களை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பஸ் நிலையத்தில் நின்ற பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இருபகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பஸ் ஒன்று அரச பஸ் தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து, இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே வவுனியா வர்த்தகர் சங்கத்தினரும் பஸ் தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் பஸ் நிலையப்பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி அரச பஸ் சாரதிகளுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது.



இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 11.30 மணியளவில் பொலிஸாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பஸ் சாரதிகளுக்கு சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பஸ்களை செல்லவிடாமல் அரச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பஸ்களை வழிமறித்து தாக்கியும் வருகின்றனர்.



சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தானின் பிரதி நிதிகளும் பஸ் நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பஸ் சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.



இதையடுத்து, வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச பஸ்கள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புதிய பஸ் நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பஸ்கள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12.20மணியளவில் பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW