அமெரிக்காவின் யுத்த படைமுகாம் திருகோணமலையில்.! முள்ளிநியூஸ்

அமெரிக்காவின் யுத்த படைமுகாம் திருகோணமலையில்.!


அமெரிக்கா தனது யுத்த படைமுகாமை திருகோணமலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே அங்கு அமெரிக்காவின் யுத்தக்கப்பல்களும் வரவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது நாட்டின் சுதந்திரம் மற்றும் சுயாதிபத்தியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையை நெருக்கடியான நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு செல்கின்றனர். தேசிய விடயங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது பரம்பரையினரே அதிகளவில் பாதிக்கப்படவுள்ளனர்.

நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவான நிலைக்கே கொண்டு செல்கின்றனர். அதனால் சர்வதேச நாடுகளும் இலங்கைமீது நம்பிக்கை இழந்துள்ளன. மேலும் உலகளாவிய ரீதியில் ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் தற்போது இலங்கை முன்னிலைக்கு வந்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்தித்தமையினால் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். மேலும் கடந்த காலங்களில் மக்கள் போராடிப்பெற்றுக்கொண்ட சலுகைகளையும் இல்லாமலாக்கவதற்கு முயற்சிக்கின்றனர். இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றையும் நீக்குவதற்கு ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW