தனித்து ஆட்சியமைப்பது யார்……? முள்ளிநியூஸ்

தனித்து ஆட்சியமைப்பது யார்……?


தேசிய அரசாங்கத்தின் நீடிப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 2017.01.27 அன்று மகிந்த தலைமையில் நுகேகொடையில் கூட்டு எதிரணியின் அரசு எதிர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.மகிந்தவிற்கான மக்கள் ஆதரவு குறையவில்லை என்பதை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நிரூபித்துள்ளனர்.கூட்டு அரசாங்கத்தின் ஆட்சி 2020 ஐ நோக்கியதாக அமையும் என நினைத்திருந்தாலும்,கூட்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் கூட்டு எதிரணியின் நடவடிக்கை அச்சுறுத்தலை தொடர்ச்சியாக ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியலில் மாற்றம் எந்த வேளையும் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு என்பதை கடந்தகால அரசியல் அனுபவம் சொல்கிறது.மகிந்தவின் தொடர்ச்சியான அரசுக்கு எதிரான சவால்களையும்,கூட்டு அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்களின் கருத்துகளையும் பார்க்கும் போது சில நேரம் கூட்டாற்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு கட்சி மட்டும் நாட்டை ஆளும் நிலை வரலாம் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.

அவ்வாறான ஒரு நிலை வருமேயானால் தனித்து ஆட்சியமைக்க கூடிய சாதகம் எந்த கட்சி வசம் செல்லும் என்ற கேள்வி எம்முள்ளே நிச்சயம் எழும்.அதற்கான விடையை ஆராய்கின்ற போது தனித்து ஆட்சியமைக்கும் ஒரு சாதகமான நிலை ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே சென்றடையும்.

மகிந்த+மைத்திரி

மகிந்தவின் ஆதரவினைப் பெறாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கமாட்டார்கள்.மகிந்தவின் பக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.மறைமுகமாக அவரின் கட்டளைக்கு இயங்கும் அவர்கள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின் பக்கம் செல்லமாட்டார்கள்.எனவே சிறிலங்கா சுதந்திர கட்சி, எதிர் நோக்கவிருக்கும் உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மகிந்தவின் ஆதரவை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மகிந்தவின் ஆதரவை பெற,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைய வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாவார்கள்.மைத்திரியையும்,மகிந்தவையும் ஒன்றினைக்கும் இரகசிய பேச்சுவார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

மைத்திரிபால+மகிந்த இணைந்து ஆட்சியமைக்க முடியுமா

ஜனாதிபதி மைத்திரிபாலவும்,மகிந்தவும் சில நேரம் சமரச உடன்பாட்டை எட்டி சுதந்திர கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியுமா என கேள்வி எழுப்பினால் அவர்கள் தனித்து ஆட்சியமைக்க கூடிய சாதகம் குறைவானதாகவே இருக்கிறது காரணம் கடந்த பொதுத்தேர்தலில் சுதந்திரகட்சி பெற்றுக் கொண்ட மொத்த ஆசனம் 95 ஆகும்.
இது தனித்து ஆட்சியமைக்க போதாது.மகிந்த+மைத்திரி ஆட்சியை தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஒரு காலமும் ஆதரிக்காது எனவே சுதந்திர கட்சிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ரணிலின் நிலைப்பாடு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்தவித அறிக்கைகளும் இன்றி ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய காரணம் சுதந்திர கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்ற நம்பிக்கையாகும்.தமிழ்தேசிய கூட்டமைப்பு சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்குவது குதிரைக் கொம்பாகும் என்று தெரிந்துள்ளமையுமாகும்.

ஐக்கியதேசியகட்சி+தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

தனித்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் ஐக்கிய தேசிய கட்சி வைத்திருக்கும் 106 பாராளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கை கோர்க்குமேயானால் ஐக்கிய தேசிய கட்சியே தனித்து ஆட்சியமைக்கும்.எனவே தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூட்டாற்சி கலையும் விடயத்தில் அதிகம் கருத்துக்களை வெளியிடுவதில்லை.

ஏமாந்தவர்கள் யார்

கூட்டாற்சி மீது அதிக நம்பிக்கை வைத்த மக்கள் இறுதியில் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.பல எண்ணங்களை மனதில் விளைத்து கூட்டாற்சியை ஏற்படுத்திய மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் ஏமாந்து போகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.எனவே மக்களின் எண்ணங்கள் நிறைவேறாமல் கூட்டாற்சி கலைக்கப்படக் கூடாது என்பது மக்களின் பிரார்த்தனை.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW