பெருகிவரும் மதமாற்றங்கள்.. யாரை நொந்து கொள்வது? முள்ளிநியூஸ்

பெருகிவரும் மதமாற்றங்கள்.. யாரை நொந்து கொள்வது?


கிறிஸ்தவ மதத்தை விடவும் ஆகக்குறைந்தது 500 வருடங்கள் இளமையான மார்க்கமான பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வழிமுறையைப் பொறுத்தவரை உலகில் பெருந்தலைவர்களின் புகழுரைகள், போற்றல்கள், பிரபலங்களின் மதமாற்றங்கள் உட்பட எப்போதும் சாதகமான விடயங்களையே பார்த்து வந்த காலம் கடந்து தற்போது நம் நாட்டில் கூட ஆங்காங்கு முஸ்லிம்கள் மதம் மாறுவதன் தீவிரம் உணரப்பட்டு வருகிறது.

தூய இறைவனின் திருப்பொருத்தத்தை அடைந்து கொள்ள இதுவே சரியான மார்க்கம் எனும் போது இஸ்லாத்திலிருந்து வெளியேறவும் கூட சிந்தனை வருமா? எனும் அடிப்படைக் கேள்வியை ஆரம்பிக்கும் காலம் கடந்து விட்டாலும் கூட இன்றளவும் அது கேட்கப்படாமல் இருப்பதால் நாளைய விளைவுகள் இன்னும் வேதனைகளை அள்ளித் தரலாம்.

அண்மையில் முன்னாள் முஸ்லிம்களின் அமைப்பு என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டதாக முகவரியும் அடையாளமும் இல்லா நிலையில் மின்னஞ்சல் செய்தி வந்திருந்தது.

தேடிப் பார்த்த போது அதன் பின்னணியில் ஏதோ ஒரு அரசியல் சக்தி இருக்க வேண்டும், சற்றே பொறுமை காத்தால் அத்தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைக்காக முன் வரும் ஊடகப் பின்னணியை அறிந்து கொள்ளலாம் என முடிவெடுத்து சமூக ஆர்வலர்களுக்கு அறிவித்து சற்றே காத்திருந்தோம்.

பெரும்பாலும் இனவாத விடயங்களைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு சிங்கள மொழி பத்திரிகையே இவ்விடயத்தை வெளியிடும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சற்று அவதானத்துடன் அந்நிறுவனத்தின் ஆங்கில மொழி நாளிதழ் அத்தகவலைக் காவி வந்தது. எப்படிப் பார்த்தாலும் ஒரே நிறுவனம் தான் என்பதால் இதன் அரசியல் பின்னணியையும் அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது அதன் ஆரம்பம் என்பதால் ‘முன்னாள்’ முஸ்லிம்கள் என்கிற அடைப்புக்குள் உண்மையிலேயே பல்வேறு வகையில் வெறுப்புகளைக் கொண்டுள்ள சக்திகளை ஒன்றிணைத்து முஸ்லிம்களைப் பலவீனப்படுத்த முடியும் என்பது சதிகாரர்களின் கணிப்பாக இருக்கும். ஆயினும், அதற்குத் தீனியாகாத வரையே நமக்கு பாதுகாப்பு.

ஆனால், நாம் எங்கே நிற்கிறோம்?

சில வருடங்களுக்கு முன் (2011) ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை முஸ்லிம்கள் மீதான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. அதை அப்போதைய ராஜபக்ச அரசு கவனித்த அளவுக்கு முஸ்லிம் சமூகம் மத்தியில் எடுபடவில்லை. காரணம், எம்மவர் இவ்விவகாரங்களில் கவனம் கொள்வதில்லை.

குருநாகலில் ஒரு கிராமத்தில் பெண்ணொருவருக்கு தகாத நேரத்தில் ‘ஹத்’ அடித்த குறித்த விவகாரத்தில் பள்ளிவாசல் தரப்பு, தானாக வந்து தண்டனையை ஏற்ற பெண்ணுக்கு அநீதியிழைத்ததாக பதிவு உருவானது. அதற்கு பதிலளிக்கும் பக்குவம் தவறிய நிலையில் எதோச்சாதிகாரமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர்களோடு உரையாடியபோது இவ்வாறான விளைவுகள் இனியும் தொடரும் எனத்தான் உணர முடிந்தது.

கடந்த வருட இறுதியில் புத்தளத்தில் ஒரு சம்பவம் உருவான போது சற்றே உணர்வலைகள் எழுந்தது ஆனால் அடங்கிக் கொண்டது. அவ்விடயத்தில் தொடர்புபட்ட சட்டத்தரணியிடம் செய்த நேர்காணலின் ஒலிப்பதிவு கூட கைவசம் இருக்கிறது. அங்கும் நியாயங்களுக்கு அப்பால் பேசப்படாத தர்மங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதன் தொடர்ச்சியில் இன்னும் பேசினால், தமிழ் மொழியில் வெளியாகும் பிரபல நாளிதழ் ஒன்றின் முகாமைத்துவத்தில் பணிபரியும் நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, இப்போதெல்லாம் ‘பெயர்மாற்ற’ விளம்பரங்கள் உங்கள் சமூகத்திலிருந்துதான் அதிகம் வருகிறது என்று ஒரு வகையில் கவலையுடன் தான் சொன்னார்.

90களின் இறுதிப் பகுதியில் வெல்லம்பிட்டிய பகுதியில் ஒரே வீட்டில் மூன்று முஸ்லிம் யுவதிகள் வேற்று மத ஆண்களைத் திருமணம் செய்து வாழ்ந்ததையும் நேரில் கண்ட அனுபவம் இருக்கிறது.

இப்படியாக, ஒரு தனி மனிதனாக இவ்விடயத்துக்கு என்னால் அடுக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஆதாரங்கள் நிறையவே இருக்க, மனதுக்குள் இருக்கும் ஒரே கேள்வி தொட்டது பிடித்ததுக்கெல்லாம் கூக்குரலும் கூப்பாடும் போட்டுச் சண்டையிட்டுக்கொள்ள நம் மத்தியில் காணப்படும் இத்தனை ஜமாத்துகளும் உண்மையில் என்னதான் செய்கின்றன என்பதாகும்.

கால் மடித்து உலமாக்களிடம் கல்வி பயிலும் பண்புள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் நவீன காலத்தில் எதிர்நோக்கும் பாரிய சிக்கல்களில் ஒன்று ‘யாரைத்தான் நம்புவது’ என்பதாகும். எனவே, இதன் பின்னாலான தீவிர ஆய்வைத் தடுத்து அவரவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் ‘செவிமடுத்து’ வாழப் பழகிக்கொண்டோம்.

ஆதலால், அதனை மேவி எழும் சமூகப் பிரச்சினைகளில் நமக்குப் பங்கில்லையெனவும் அதைத் தீர்க்கும் கடமை யாருக்கோ இருக்கிறது எனவும் மிகத் தீர்க்கமாக முடிவெடுத்த தனிமனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட சமூகமாக நவீன கால சோனக சமூகம் மாறிக்கொண்டுள்ளது.
ஒன்றில் அது உலமாக்களின் கடமை, இல்லெயனில் அரசியல்வாதியின் கடமையென விரல் நீட்டத் தெரிந்த நமக்கு, நமது கடமையின் ஆழம் அறிந்து செயற்பட முடியாத அளவு சுயநலம் பெருகியிருக்கிறது என்றால் கூட மிகையில்லை.

நமது சமூகத்தின் ஒரு பகுதியிடம் தங்கியிருக்கும் செல்வம் தேவையுள்ள இன்னொரு பகுதியைச் சென்றடைகிறதா எனும் கேள்வியிலிருந்து இந்த சமூகக் கட்டமைப்பு கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கோடீஸ்வரர், அவரோடு சிறு சந்திப்பு இடம்பெற்று நானும் இன்னொரு நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், இவரைத் தெரியுமா? ஊருக்கு காரில் போகும் போது தெருவில் நடந்து கொண்டு போவோரை அழைத்து வலுக்கட்டாயமாக ‘சதக்கா’ கொடுப்பார் என்றார்.

அப்போ உங்கள் ஊரில் ஏழைகளிருக்க மாட்டார்களே என்ற கேள்விக்கு, அடிப்படை வசதி, இருக்க ஒரு இல்லம் இல்லாது கஷ்டப்படுபவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள் என்று பதில் தந்தார்.

ஒரு சில ஊர்களில் பைத்துல் மால் முறையைப் பின்பற்றி பள்ளிவாசல்கள் மூலம் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

ஆனாலும் நம் தர்மம், தெரு – ஊர் – பிரதேசம் – மாவட்டம் – மாகாணம் – ஜமாத்து எல்லாம் தாண்டித்தான் இ;ன்னும் ஒரு ஊரைச் சென்று அடைய வேண்டும் என்பதால் தசாப்த காலங்களாக ஆண்களால் தொழிலே செய்ய முடியாது துவண்டு போயிருக்கும் புல்மோட்டை போன்ற கிராமங்களில் இன்றும் கூட அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கப்பால் தெரிந்த – தெரியாத பல பிரதேசங்களில் இஸ்லாத்தின் பால் மீண்டோரின் அவல நிலையும் ஆதரவற்ற நிலையும் முக்கியமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது.

இவ்வாறு இஸ்லாத்தின் பால் மீண்டு சவுதியில் தஃவா பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவரது மனைவியும் பிள்ளையும் அவரது திடீர் மரணத்தின் பின் அனுபவித்த இன்னோரன்ன துன்பங்களைக் கேள்விப்பட்ட போதும், இலங்கையிலேயே இவ்வாறானவர்கள் மீது காட்டப்படும் ‘வேற்றுமை’ உணர்வு தொடர்பில் அறிகின்ற போதிலும் கூட மனம் பதபதைக்கும்.

ஒரு காலத்தில் நம் சமூகத்தில் ‘மௌலா இஸ்லாம்’ எனும் அடையாளத்தில் இவ்வாறான மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாக்கப்பட்ட வரலாறுகளையும் மறுப்பதற்கில்லை. அண்மையில் களுத்துறையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது எம்மவர்கள் ஓடிச்சென்று சட்டரீதியான உதவிக்கரம் நீட்ட முன் வந்த போது மகிழ்ச்சியாகவே இருந்து. ஆனாலும், ஆபத்துகள் குறித்த ஆய்வுகள் சமூகத்தில் இல்லாதிருப்பதை மறைக்க முடியாது.

அதை ‘ஏன்’ என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிப்பது தகும்.

ஒவ்வொரு தனி மனிதனும் ஏன் எனக் கேட்பதிலிருந்தே இதற்கான விடையைக் காண முடியும். இந்த வாரம் நம் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட ஒரு விடயமாக திம்புலாகலயில் 7 வயது சிறுவன் பௌத்த துறவியாக இணைந்து கொண்ட விடயம் இருக்கிறது.

அப்படியொரு நிகழ்வு வரும் வரை உணர்வுரீதியான எதிர்வினைக்கு (reaction) மாத்திரம் பழகிக்கொண்ட எம் சமூகம் அது தொடர்பில் கவலை கொள்ளத் தயாராக இல்லையென்பது அச்சம்பவத்தில் இருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

தந்தை இஸ்மாயில் தனயனை ஒப்படைத்தார் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எத்தனை வேதனையானது என்பதை எழுத்தில் வர்ணிக்க முடியாது. ஆனாலும், இந்த சோதனைகளைத் தாண்டத் துணியாத வரை நாம் இவ்வேதனைகளிலிருந்து விடுபடப் போவதுமில்லை.

இதற்கிடையில் புதன்கிழமை மேலும் இரு சிறுவர்களை ரத்மலானை பகுதியில் லெபனிய கணவரால் கைவிடப்பட்ட ஒரு தாய் இவ்வாறு ஒப்படைக்க முயன்றபோது சுடச்சுட நாம் விழித்துக்கொண்டிருந்ததால் அல்ஹம்துலில்லாஹ் மேமன் சங்கத்தின் உதவியோடு அவர்களைக் காப்பகத்தில் இணைத்துக் காப்பாற்ற முடிந்தது.

ஆனால், இது ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் முடிவில்லை.

நானறிய, அதுவும் ஒலிபெருக்கிகள் இல்லாத காலத்திலேயே விகாரையில் ஓதப்படும் பிரித் கேட்கும் தொலைவில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பத்தின் இளைஞர்கள் ஏறத்தாழ பௌத்தர்களாகவே வாழ்ந்த காலம் இருந்தது.

அவர்கள் வீட்டிலிருந்து 2 மைல் தூரத்தில் பள்ளிவாசல் இருந்தாலும் அந்தப் பள்ளிவாசலிலிருந்து அவர்களை அணுகி விலக்கியெடுக்க முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலை நிலவியதைப் பார்த்து வளர்ந்த வேதனை ஞாபகம் வருகிறது.

அவர்களின் காரணம் அடிப்பiடியில் ‘வறுமை’ அந்த வறுமையைப் போக்க முடியாத சூழலில் எழுச்சியில்லாத வாழ்க்கை பலருக்குத் தங்கி வாழும் நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது.

நம்மைப் பொறுத்தவரை வருடம் ஒரு முறை ஸக்காத்துகளை அளந்தும் பிரித்தும் கொடுப்பதால் நம் ஊரில் ஒரு குடும்பத்தையாவது அல்லது அதில் ஒருவரையாவது அடுத்த வருடம் ஸக்காத் கொடுக்கும் அளவு வளர்ப்பதற்கு உதவும் நுட்பத்தை மறந்தவர்களானோம்.

ஆதலால், தங்கி வாழும் சமூக நிலை இந்த பெறுபேறுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

இன்று கூட புதிதாக ஒரு ஜமாத் உருவாக்கப்பட்டால், அந்த ஜமாத்தில் இணைந்திருப்பதால் மாதாந்த ஆகார உதவி கிடைக்கும் என்றால் அதை விரும்பியோ விரும்பாமலோ தெரிவாகக் கொள்ளும் துர்ப்பாக்கியசாலிகளை நம் சமூகம் கொண்டிருக்கிறது. அவர்கள் பற்றிய சிந்தனை மற்றவர்களிடம் எங்கிருக்கிறது?

விதிவிலக்காக ஒரு சிலர் தனித்தியங்கினாலும் ஒன்றுபட்ட சமூக வலையமைப்புக்குள் இது குறித்த பாரிய விழிப்புணர்வும் வேலைத்திட்டமும் அவசரமாகத் தேவைப்படுகிறது. வெறுமனே மதம் மாறுபவர்களைக் காப்பாற்ற மாத்திரம் அல்ல, நம் சன்மார்க்கத்தின் வழிமுறைகளை அமுல்படுத்தி இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும்!

ஆனாலும், யார் பூனைக்கு மணி கட்டுவார் என்ற கேள்வி தொக்கு நிற்கிறது. ஆதலால், இதனைப் பொறுப்போடு வடிவமைக்கும் பொறுப்பை மார்க்க அறிஞர்களும் செயற்படுத்தும் பொறுப்பை சிவில் சமூகமும் ஏற்றுக்கொள்ளும் தேவையிருக்கிறது.

கடந்து சென்ற வரலாறுகள் படிப்பினையைத் தந்து நிற்கிறது என்பதால் அலட்சியமில்லாத ஆராய்வின் அவசியத்தை உணர்த்தி நிற்கும் காலமிது. எனவே, அதுவரை தனிமனிதர்கள் தம் பொறுப்புக்களை உணர்ந்து, தாம் சார்ந்த ஊரின் கிராமத்தின் நிலையறிந்து, தேவையறிந்து செயற்படுபவர்களாக மாறும் தேவையையும் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.



Irfan Iqbal
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW