தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்கள் 300... விண்ணப்பித்தோர் தொகை வெறும் 33. நியமனம் பெற்றுக்கொண்டோர் தொகை 18. முள்ளிநியூஸ்

தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்கள் 300... விண்ணப்பித்தோர் தொகை வெறும் 33. நியமனம் பெற்றுக்கொண்டோர் தொகை 18.


சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கடந்த வருடம் தமிழ் மொழி மூல பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டது.இதற்கிணங்க சபரகமுவ மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவிய 300 பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 33 எனவும் , பதவி நியமனம் பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 18 எனவும் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சர் சட்டத்தரணி பானு முனுப்பிறிய தெரிவித்தார் .

சபரகமுவ மாகாணத்தில் கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட சிறப்புமிக்க பாடசாலைகளுக்கு பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.

சபரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி வைபவம் கடந்த ஜனவரி 29 சபரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம் பெற்றது.

சிறப்புமிக்க பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ் சபரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 43 க்கும் அதிகமான சிங்கள ,தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நிழல் பிரதி இயந்திரங்கள் தொலைநகல் இயந்திரங்கள் , தளபாடங்கள் மற்றும் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் கல்வி அமைச்சினால் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தமிழ் மொழி இலங்கையின் அரச கரும நிர்வாக மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மேற்படி வைபவம் தொடர்பில் தமிழ் ,முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கு மாகாண கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக் கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்தமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்தனர் .

இதே போன்று மேற்படி வைபவ நிகழ்ச்சி அறிவிப்புக்களிலும் முற்றாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் பலரும் கவலை தெரிவித்தனர் .
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW