நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர் முள்ளிநியூஸ்

நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்



நாமல் ராஜபக்‌ஷ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல், வாக்குமூலம் வழங்குவதிலிருந்து தவிர்ந்து வந்த அவர் மீது, அவ்வாணைக்குழுவினால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தான் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயாராகவுள்ளதால், குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு, நாமல் தனது வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

ஆயினும், குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கப்படும் வரை குறித்த வழக்கை நிறைவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

குறித்த அவமதிப்பு தொடர்பான வழக்கு நாளை (21) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முறையற்ற விதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட ரூபா 100 மில்லியன் பணத்தின் மூலம், ஹலேகோப் நிறுவனத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கு தொடர்பில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 5 பேரின், 9 வங்கிகளிலுள்ள 15 கணக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை கடந்த ஜனவரி 31 ஆம் திகதி, நீதிமன்றம் வழங்கியிருந்தது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW