இஸ்லாமிய தலைவர் தேவையில்லை, முஸ்லிம் பெண்களை பாராட்டும் நீதிபதி கணேசராஜா முள்ளிநியூஸ்

இஸ்லாமிய தலைவர் தேவையில்லை, முஸ்லிம் பெண்களை பாராட்டும் நீதிபதி கணேசராஜா


முஸ்லிம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு தேவைநாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த மாற்றத்திற்காய் துணிந்திரு என்னும் தலைப்பிலான மகளிர் விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் திருமணச்சட்டத்தில் முன்மாதிரியான விடயங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் சில இஸ்லாமிய தலைவர்கள் ஆண், பெண் சமத்துவத்திற்கு மறுப்பு தெரிவித்தவேளையில் அதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்பு போர்கொடி தூக்கியது.

அந்த கூற்றினை நிராகரித்து ஊடகங்களில் அறிக்கையினையும் வெளியிட்டதுடன் அவ்வாறான இஸ்லாமிய தலைவர் தேவையில்லையென்றும் துணிச்சலுடன் வெளிப்படையாக தெரிவித்தது.

முஸ்லிம் சமுதாயத்தில் துணிச்சல் மிக்க ஒரு பெண் சமூதாயம் உருவாகியுள்ளதையிட்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம். முஸ்லிம் சமூகம் அனைத்து விடயங்களிலும் முன்னோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

மனித உரிமை விடயங்களில் கூட முஸ்லிம் சமூகம் துணிச்சலுடன் குரல் கொடுத்து வருகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் முஸ்லிம் பெண்களாகும்.

வெளியிடங்களில் இருந்துவந்து பல செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டனர்.என்னையும் அக்காலத்தில் அழைத்து சட்டரீதியான விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று கல்வியில் கூட முஸ்லிம் பெண்கள் முன்னேறிக்கொண்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கு கல்வி கற்றதன் பின்னர் இங்கு வந்து மிகச்சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்டுள்ளனர்.அதனை ஏனைய சமுதாயத்தில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW