மாயக்கல்லி ஆக்கிரமிப்பு; ஆவணங்களுடன் ஜனாதிபதியை சந்திக்க கிழக்கு முதலமைச்சர் தீர்மானம் முள்ளிநியூஸ்

மாயக்கல்லி ஆக்கிரமிப்பு; ஆவணங்களுடன் ஜனாதிபதியை சந்திக்க கிழக்கு முதலமைச்சர் தீர்மானம்


இறக்காமத்தில் முஸ்லிம்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

இறக்காமத்தைச் சேரந்த அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து முதலமைச்சரிடம் இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் மகஜர் ஒன்றை நேற்று (24) கையளித்தபோதே, கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர், கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக காணிகள் கையகப்படுத்தப்படுவதையும் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இது நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிங்களின் பாரம்பரியக் காணிகள் மீதான அத்துமீறல்கள் நல்லாட்சிக்கு நம்பி வாக்களித்த முஸ்லிங்கள் மத்தியில் பாரிய அதிருப்தியலையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாடு அபிவிருத்தியடைந்த நாடாக பரிணமிப்பற்கான உரிய தருணமிதுவாகும், இந்த பொன்னான காலத்தை பயன்படுத்த விடாமல் சில இனவாதிகள் திட்டமிட்ட வகையில் நாட்டை தொடர்ந்தும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைகின்றார்கள்,

அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் பல்லின் மக்கள் வாழும் இந்த நாட்டில் எல்லா இனத்தினரும் தமது இடங்களில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது. அந்த உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து அது தொடர்பில் நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான உரிமை நமக்கு இருக்கின்றது.

நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் மாயக்கல்லி மலையில் இவ்வாறு அத்துமீறுவது நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகும்,

நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவது யாராக இருந்தாலும் தராதரம் பாராது கைது செய்யப்பட வேண்டும்.ஆனால் இங்கு நீதித்துறையையே கேள்விக்குட்படுத்துபவர்கள் மீது சிறு எச்சரிக்கை கூட விடுக்கப்படாமை நீதித்துறையின் மீது மக்களுக்கு சந்தேகங்களை தோற்றுவிக்க ஏதுவாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்,

எமது பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு எமது எதிர்கால இருப்பையே கேள்விக்குட்படுத்தும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW