ஒன்றாக சேர்ந்து குடித்து நண்பரை கொலை செய்த நபர் கைது முள்ளிநியூஸ்

ஒன்றாக சேர்ந்து குடித்து நண்பரை கொலை செய்த நபர் கைது


ஒன்றாக பழகிய தனது நெருங்கிய நண்பர் ஒருவரை தலையில் பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று கல்நேவ, சிறிமாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கல்நேவ பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ஹொரண பிரதேசத்திலிருந்து வந்து தற்போது கல்நேவ சிரிமாகமையில் வசிக்கும் 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஈ.ஏ. ரோஹண குமார என்பவராவார்.

இச்சம்பவம் பற்றி கல்நேவ பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் தெரிவித்ததாவது, 

நேற்று முன்திம் (17) காலை 10.30 மணியளவில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த தலைமையிலான பொலிசார் அவ்விடத்திற்கு சென்ற போது ஒருவர் படுக்கையில் இரத்த வெள்ளத்தில் தலையில் தாக்கப்பட்டு காணப்பட்டார். 

இதன் பின்னர் சிவில் உடையில் அங்கு நடமாடிய புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் எச்.எம். ஜயூப் (23646) பண்டாரநாயக்கா (28221) இந்திரபாலா (31515)
சிவகுமார் (47690) புஷ்பகுமார (15612) ஆகியோர் பொது மக்களுடன் நடமாடி அவர்கள் வழங்கிய தகவல்களின்படி சந்தேக நபரான அவருடைய நண்பரான 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கே. ஜயவீர நேற்று (18) பிற்பகல், கல்நேவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் படி, 

கொலை செய்யப்பட்டவரின் மனைவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மடு தேவாலயத்திற்கு மத வழிபாட்டுக்காக தமது குடும்பத்தினருடன் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கொலை செய்யப்பட்டவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அந்நேரத்தில் சந்தேகநபரும் அவரது மற்றுமொரு நண்பரும், கொலை செய்யப்பட்டவரும் அன்றைய இரவு, அதிகமாக மதுபானம் அருந்தியுள்ளனர். அதன் பின்னர் 17 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் மீண்டும் வந்து தூக்கத்தில் இருந்த நண்பருக்கு தலைப்பகுதியில் பொல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தாக்கிய பொல்லை பக்கத்தில் ஓடிய கால ஓயா நீரோடையில் வீசி விட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் காலையில் இறந்தவரின் நடமாட்டம் இல்லாமையினால் அயல் வீட்டில் வசிக்கும் மனைவியின் பாட்டி அவரின் வீட்டுக்கு சென்று பார்த்த போதே இவர் படுக்கையில் கொலை செய்யப்பட்டு உள்ளதை கண்டு அயல் வீட்டார் ஒருவரின் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்படி நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் காரணமாக நட்புறவாக பழகி இக்கொலையை மிகவும் சூட்சகமான முறையில் மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கெகிராவ மஜிஸ்திரேட் நீதவான் துலான் வீரவர்தன மரணமடைந்தவரின் சடலத்தை வைத்திய பரிசோதனைக்காக அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பிய வைத்திய பரிசோதனையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் இன்று (19) கெகிராவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.மேலதிக விசாரணைகளை கல்நேவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW