கந்தளாயில் புதையல் தோண்டிய 8 பேர் விளக்கமறியலில்
கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சமகிபுர வயல் பகுதியில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (29) அதிகாலை குறித்த சந்தேகநபர்களையும் அதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியபுர, சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும், ஹபரண பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த போது எட்டு பேரை கைது செய்ததாகவும் சிலர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நேற்றைய தினம் (29) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் துசித தம்மிக உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எப்.முபாரக்
