"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் முள்ளிநியூஸ்

"ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்" அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர்


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி  தெரிவித்தார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மரணமடைந்தார். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தெரிவித்து வந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா என்ற பெயரில் செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி வருகிறது.

இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும், அதிமுகவின் அம்மா அணியினரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ வைத்தியசாலையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்ததாவது,

‘ஜெயலலிதா சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. அவரது மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்’ என்று தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW