சி.ஐ.டி. ஆள் பார்த்து செயற்படுகின்றது; கொழும்பு பிரதான நீதிவான் அதிரடி குற்றச்சாட்டு....
ஆதர்ஷா கரந்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்து உத்தரவிடும் போது திறந்த மன்றில் அறிவிப்பு.
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், ஆள் பார்த்து செயற்படுவதாகவும் இதனை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் தான் அவதானித்துள்ளதாகவும் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் நீதிமன்றில் அறிவித்தார்.
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷா கரந்தன, ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்ட விவகார வழக்கு விசாரணையின் இடையே நீதிவான் இதனை அறிவித்தார்.
நேற்று (4) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிணையில் உள்ள ஆதர்ஷா கரந்தன மன்றில் ஆஜரானார். இதன்போது தனக்கு முதலீடு ஒன்று தொடர்பில் கலந்துரையாட வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால், பிணை நிபந்தனையான வெளிநாட்டு பயணத் தடையை அடுத்த தவணை வரை தளர்த்துமாறு ஆதர்ஷா கரந்தன தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றைக் கோரினார்
இதற்காக அவர் ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த கோரிக்கைக்கு கடும் ஆட்சேபனம் வெளியிட்டனர்.
வழக்குடன் தொடர்புபட்ட விடீயோ காட்சி அடங்கிய சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்காத நிலையில், சந்தேக நபரின் கோரிக்கைக்கு அனுமதியளிக்கக் கூடாது என சி.ஐ.டியினர் கோரினர். அப்படி அனுமதியளித்தால் அவர் மன்றை புறக்கணிக்கலாம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும் ஆதர்ஷா கரந்தனவின் சட்டத்தரணிகள் அதனை மறுத்தனர். இந் நீதிமன்றம், சந்தேக நபர் மன்றை புறக்கணிக்கக் கூடியவர் அல்ல என ஏற்கனவே தீர்மானித்தே பிணையளித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந் நிலையில், விடயங்களை ஆராய்ந்த பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் தனது உத்தரவை அறிவித்தார்.
அதில், தனது வாழ்வாதார நடவடிக்கைக்காக வெளிநாடு செல்ல சந்தேக நபர் கோருவதாகவும், சந்தேக நபர் மன்றை புறக்கணிக்கக் கூடியவர் அல்ல என தான் ஏற்கனவே தீர்மானித்துள்ள நிலையில், சி.ஐ.டி.யின் அந்த தர்க்கத்தை ஏற்க முடியாது எனவும் நீதிவான் அறிவித்தார்.
இதனைவிட, ' சி.ஐ.டி.யினர் உண்மையில் ஆள் பார்த்தே செயற்படுகின்றனர். அவர்கள் ஒரு சம்பவத்தின் விடயதானத்துக்கு அமைய நடந்துகொள்ளவில்லை. இந்த நீதிமன்றில் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் அவர்களின் செயற்பாடுகளை நான் அவதானித்திருக்கின்றேன்.
இதே நீதிமன்றில், கைது உத்தரவின்றி கைது செய்ய முடியுமான குற்றச்சாட்டு தொடர்பில் ஒருவரை கைது செய்யாதிருக்க சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதிகளுடன் வந்து சி.ஐ.டி.யினர் வாதிட்டனர்.
அதே நேரம் இவ்வழக்கில் , நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையின் இடையே, முதலீடொன்றை கொண்டுவர தற்காலிகமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரும் போது கடும் ஆட்சேபனைகளை முன் வைத்துள்ளனர்.
சி.ஐ.டி.யினர் ஆள் பார்த்தே இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.' என தெரிவித்த கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே ஆதர்ஷாவை மன்றை புறக்கணிக்கக் கூடியவர் அல்ல என தீர்மானித்திருப்பதால், அதே நிலைப்பாட்டில் அவரின் கோரிக்கைக்கு அமைய வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்தி உத்தரவிட்டார்.
அத்துடன் மேலதிகமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையாளர் ஒருவரை இதற்காக மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்ட நீதிவான், அடுத்த தவணையான எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிவரை ஆதர்ஷாவின் வெளிநாட்டுப் பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ளதை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க, நீதிமன்ற பதிவாளருக்கு கட்டளையிட்டார்.
முன்னதாக, பேராசிரியர் ஆஷு மாரசிங்க செல்லப் பிராணியான நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ பதிவு ஆதர்ஷா கரந்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட பின்னர் வைரலாகியது.
இந் நிலையில், ஊடகங்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், இதற்காக செம்மைப்படுத்தப்பட்ட காணொளி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆதர்ஷா கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
