பிரமுகர் பயணிகள் முனையத்தில் நவீன சோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி உத்தரவு முள்ளிநியூஸ்

பிரமுகர் பயணிகள் முனையத்தில் நவீன சோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி உத்தரவு



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப சோதனை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

பிரமுகர் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில், இந்த சாதனங்களை நிறுவுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூன்று கிலோ தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசியுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் பயணிகள் கொண்டு வரும் கைப்பைகளை பரிசோதிக்க அதிநவீன சோதனை இயந்திரங்கள் இருக்கின்றன. ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக பிரமுகர் பயணிகள் முனையம் வழியாக வருபவர்களின் கைப்பைகள் ஆய்வு செய்யப்படுவதில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

பல வெளிநாடுகளில், பிரமுகர் பயணிகள் முனையங்களில் உயர் தொழில்நுட்ப சோதனை ஆய்வு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகள் கைப்பைகளில் கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பொருட்கள் மற்றும் வரி செலுத்தாமல் கொண்டு வரும் பொருட்களை தடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW