செங்கடல் பகுதியில் உயிரிழந்த நபரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது முள்ளிநியூஸ்

செங்கடல் பகுதியில் உயிரிழந்த நபரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது



மத்திய கிழக்கின் செங்கடல் பிரதேச கடற்பரப்பில் பாதுகாப்பு அதிகாரியாக சேவையாற்றிய நிலையில் உயிரிழந்த இலங்கை நபரின் சடலம் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஓமான் மற்றும் எகிப்து இடையில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையின் ரக்னா லங்கா நிறுவனத்தில் இந்த நபர் கடமையாற்றி வந்துள்ளார்.

பொலன்நறுவை பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதான பீ.ஜீ.புஷ்பகுமார என்பவரின் சடலமாக இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பு சேவைக்காக மேற்கொள்ளப்படும் உடல் நல பரிசோதனையின் பின்னர், மதிய உணவை சாப்பிட்டு விட்டு உறங்கிக்கொண்டிருந்த போது இவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையில் கடமையாற்றியுள்ள இந்த நபர் உத்தியோபூர்வமாக விலகி, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் பணியில் இணைந்துள்ளார். நான்கு வருடங்களாக அவர் ரக்னா லங்கா நிறுவனத்தில் கடமையாற்றியுள்ளார். 

கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்த இந்த நபரின் உடல் ஓமான் துறைமுகத்தில் சுமார் 15 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று மாலை 4.20 அளவில் விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. 

உடலை பெற்றுக்கொள்ள விமான நிலையத்திற்கு சென்றிருந்த உறவினர்கள், மரணம் சந்தேகத்திற்குரியது என கூறியதை அடுத்து, பிரேதப் பரிசோதனைகளுக்காக உடல் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW