எனக்கு மதுபானம் கொடுத்து கொல்லச் சொன்னார்கள், அவரை கொலை செய்தேன் : சந்தேகநபர் வாக்குமூலம் முள்ளிநியூஸ்

எனக்கு மதுபானம் கொடுத்து கொல்லச் சொன்னார்கள், அவரை கொலை செய்தேன் : சந்தேகநபர் வாக்குமூலம்



“எனக்கு மதுபானத்தை கொடுத்து கொலை செய்யச் சொன்னார்கள், நானும் அவரை தாக்கி கொலைச் செய்தேன்” என 33 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஊருபொக்க பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தொலமுல்ல- அன்னாசி கல வத்த பிரதேசத்தில் வசித்து வந்த 51 வயதான கப்புகே ஜினதாச என்ற நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் உயிரிழந்தவரின் மனைவி (83 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும், 83 வயதுடைய உயிரிழந்த நபரின் மனைவியும் நேற்று (17) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

“அவராலேயே இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளது. அவர் எனக்கு குடிக்கக் கொடுத்தார், அவரைக் கொல்லச் சொன்னார். அதன் பிறகு, அடக்கம் செய்ய வேண்டிய இடத்தை அவரே காட்டினார். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் மொரவக்க பொலிஸார் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்ததுடன், பொலிஸ் அவசர பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட கப்புகே ஜினதாசவின் மூத்த மகன் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கடந்த 15ஆம் திகதி நீதவானுடன் சென்ற பொலிஸார், இறந்தவர் புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டதாகவும், அங்கு கழிவறை குழி தோண்டப்பட்டு ஒன்பது அடி ஆழத்தில் இருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.

மேலும் பல எலும்பு துண்டுகள், பற்கள், உடலில் சுற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துணி துண்டுகள், இரண்டு சரோன்கள், இரண்டு திரைச்சீலைகள் கொண்ட ஜன்னல் துணி, மூன்று தலையணை உறைகள் மற்றும் ஒரு டி-சர்ட் மீட்கப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த பாகங்கள் மீட்கப்பட்டபோது, ​​சந்தேகநபரான 83 வயதான பெண் இவை தனது கணவருடையது என அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரைக் கொன்று புதைத்ததைக் கூறி கதறி அழுததாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

பயங்கரவாத காலத்தில் அதாவது 1989 ஆம் ஆண்டு, குறித்த பெண், கித்துல் பூ வெட்டும் தொழிலாளியான இரண்டாவது சந்தேக நபரின் உதவியுடன் சட்டப்பூர்வமான கணவனை அடித்து கொன்று மலசலகூட குழியில் புதைத்துள்ளார் என்ற உண்மைகளையும் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்தனர்.

சந்தேகநபரான பெண் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், சக்கர நாற்காளியின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW