கணவரின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த வயோதிபப் பெண்
உயிரிழந்த தனது கணவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பெண் ஒருவர் தொடர்பிலான தகவல் தென்னிலங்கையில் இருந்து பதிவாகியுள்ளது.
நீர்ச்சத்து குறைபாடு மற்றும் போசாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் இரு வாரங்களுக்குப் பின்னர், மாத்தறை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பணம் இல்லாத நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் இரு வாரங்களாக வைக்கப்பட்டிருந்தது.
திக்வெல்ல பதிகம, மஹகெதர தோட்டத்தில் வசித்து வந்த புஸ்ஸல ஹேவகே வீரசேன (வயது 75) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தேங்காய் உடைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
அவரது திடீர் மரண விசாரணையின் போது, அயலவர்கள் தனக்கும் தனது கணவருக்கும் உணவு கொடுத்ததாகவும், தனது கணவர் பத்கம அரசு மருத்துவமனையில் இருந்து மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் பணம் இல்லாமையினால் அவரை பார்க்க முடியவில்லை என உயிரிழந்தவரின் மனைவி சோமாவதி கூறியுள்ளார்.
எனவே, கணவரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், அரசு செலவில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
தனக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தென்னந்தோப்பு உரிமையாளர் கொடுத்த சிறிய வீட்டில் கணவருடன் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, இடது நுரையீரலில் நிமோனியா நோயுடன் ஆஸ்துமா அதிகரித்ததன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
நீரழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் இந்த மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறந்தவரின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, அரச செலவில் சடலத்தை அடக்கம் செய்ய முடியுமா என விசாரணை செய்யப்பட்டது.
எனினும், உயிரிழந்தவரின் மனைவி இருப்பதால், அரசு செலவில் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாது என கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனால், உயிரிழந்தவரின் மனைவி செய்வதறியாது தவித்துள்ளார்.
சடலத்தை அடக்கம் செய்வதற்காக மாத்தறை மாநகர சபைக்கு 3500 ரூபாவும், அதனை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கு மலர்சாலைக்கு 11 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறும் கோரப்பட்டது.
இந்நிலையில், அங்கிருந்தவர்களின் ஒத்துழைப்புடன் பணம் சேகரிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW