உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் - நான்கு வருடங்களின் பின்னர் குற்றப்பத்திரங்கள் கையளிப்பு.... முள்ளிநியூஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் - நான்கு வருடங்களின் பின்னர் குற்றப்பத்திரங்கள் கையளிப்பு....

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அதன் பின்னர் இறுதி அறிக்கையை 2021 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கையளித்தது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடாத்தப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர், அந்த தாக்குதலுக்கு முன்னர் தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்காமை ஊடாக பொறுப்புக்களை தட்டிக்கழித்ததாக விசாரணைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு குற்றப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.




உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நான்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு அனுப்பி வைத்திருந்தார்.

அதில் சில சிரேஷ்ட அதிகாரிகள் தமக்கு கீழ் செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு அதனை மையப்படுத்தி செயற்பட அத்தகவல்களை அனுப்பியிருந்த போதும், அவர்கள் அது தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

இதனூடாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுக்க முடியுமான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போனதாக கூறப்படுகின்றது.... இது தொடர்பில் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதி நியமித்த நீதியரசர் மலல்கொட தலைமையிலான மூவர் கொண்ட குழுவின் அறிக்கை மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் நடைப் பெற்ற ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

அதன்படியே, இவ்வாறு பொறுப்பினை தட்டிக்கழித்த சிலருக்கு தற்போது பொலிஸ் மா அதிபர் ஊடாக குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு இவ்வாறு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்படி குண்டுத் தாக்குதல் நடக்கும் போது மேல் மாகாணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தற்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாக்குதல் நடக்கும் போது கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தற்போதைய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க ஆகிய அதிகாரிகளுக்கும் இந்த குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட கஞ்சா விவகாரத்தால் தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அப்போதைய கட்டான பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார, கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சாகராக அப்போது கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச சஞ்ஜீவ பண்டார, அப்போதைய கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 11 பொலிஸ் அதிகாரிகளின் கடமை மீறல் அல்லது பொறுப்புக்களை தட்டிக்கழித்தல் தொடர்பில் விசாரணை நடாத்த சட்ட மா அதிபர் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபராக இருந்த தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அது தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர், சட்ட மா அதிபர் குறிப்பிட்ட 11 பேரில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தவிற ஏனையோர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

எனினும் இது குறித்த குற்றப் பத்திரிகை, தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க, நந்தன முனசிங்க உள்ளிட்ட எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே தயார் செய்யப்பட்டன.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு தயார் செய்த குற்றப் பத்திரிகை பொலிஸ் மா அதிபர் ஊடாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுக்கு அனுப்பட்டன.

எனினும் அப்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் முடியும் வரை குற்றப் பத்திரங்களை அந்த அதிகாரிகளுக்கு கையளிக்காமல் இருக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு கடந்த 2020 பெப்ரவரி மாதம் தீர்மானித்திருந்தது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு அதன் பின்னர் இறுதி அறிக்கையை 2021 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கையளித்தது..... எனினும் அப்போது 20 ஆவது அரசியல் திருத்தம் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அதிகாரங்கள் அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அரச சேவை ஆணைக் குழு கடந்த 2021 ஜூன் 15 ஆம் திகதி இது தொடர்பிலான குற்றப் பத்திரங்களை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்தது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நந்தன முனசிங்க, தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.கே.சி. அத்துகோரள, பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டார, உதவி பொலிஸ் அத்தியட்சர் குமாரசேன, உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார( பொலிஸ் அத்தியட்சராக பின்னர் பதவி உயர்வு பெற்று கஞ்சா விவகாரத்தில் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார்) ஆகியோருக்கே வழங்க அந்த குரறறப் பத்திரிகைகள் அனுப்பட்டிருந்தன.

இதனைவிட, பிரதான பொலிஸ் பரிசோதகர் மஹிந்த கருணாரத்ன, பொலிஸ் பரிசோதகர் நவரத்ன, பொலிஸ் பரிசோதகர் உபேந்ர, பொலிஸ் பரிசோதகர் அபேசிங்க, பொலிஸ் பரிசோதகர் செனவிரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் குமார, பொலிஸ் சார்ஜன் சுனில் ஆரியசிங்க, பொலிஸ் சார்ஜன் ராஜபக்ஷ, பொலிஸ் சார்ஜன் ஹந்தபான்கொட, பொலிஸ் சார்ஜன் நிஷாந்த, பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பத் உள்ளிட்டோருக்கும் உடனடியாக குற்றப் பத்திரிகை கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அரச சேவை ஆணைக் குழு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரச சேவை ஆணைக் குழுவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி, இந்த அதிகாரிகள் குற்றங்கள் தொடர்பில் சாட்சியாளர்களாக இருக்கலாம் என்பதால் குற்றப் பத்திரிகை அளிக்க வேண்டாம் என கோரியிருந்தார். அதனால் குற்றப் பத்திரிகை இதுவரை கையளிக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் குறித்த உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு குற்றப் பத்திரிகை கையளிக்கப்படாமை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பட்டு வந்த நிலையில், அப்பத்திரங்கள் கடந்தவாரம் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பட்டன.

இந்நிலையிலேயே தற்போது அவை நேற்று முன் தினம் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது ஓய்வு பெற்றுள்ள நந்தன முனசிங்க மற்றும் அத்துகோரள உள்ளிட்டோர் தவிர்த்து கடமையில் இருக்கும் ஐந்து பேருக்கு குற்றப் பத்திகை கையளிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில், அவருக்கு இதுவரை குற்றப் பத்திரிகை கையளிக்கப்படவில்லை.

அவருக்கும் குற்றப் பத்திரிகை கையளிக்கப்படுமாக இருப்பின், பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்டத்துவத்தின் படி பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த படியாக இருக்கும் முதல் மூன்று பேருக்கும் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக அது மாறிவிடும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW