மூதூரில் புதிய நீதிமன்றக் கட்டிடம் இன்று திறந்து வைப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் இன்று புதிய நீதிமன்றக் கட்டிடமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இன்று காலை ஒன்பதரை மணியளவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி.யின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நீதிமன்றக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 39 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு யுத்தத்துக்கு முந்திய காலப்பகுதியில் மூதூரை அண்டிய கிண்ணியா நகரில் நீதவான் நீதிமன்றம் ஒன்று அமைந்திருந்தது.
எனினும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக குறித்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஒரு கட்டத்தில் முடக்கப்பட்டது.
அதன் பின்னர் மூதூர் மற்றும் கிண்ணியா மக்கள் திருகோணமலையில் அமைந்திருக்கும் நீதிமன்றத்தை நாடி தமது சட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன் கிண்ணியா நீதிமன்ற கட்டிடம் அமைந்திருந்த காணியும் பாடசாலையொன்றின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மூதூரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரே தெருவில் நீதிமன்றம், பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், ஏனைய அரச அலுவலகங்கள் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை கொண்ட ஒரே நகரமாக மூதூர் நகரம் மாற்றம் பெற்றுள்ளது.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.

