பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மாற்ற சிலர் முயற்சி- மகிந்த

அரசியலமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மாற்ற சிலர் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
போர் வெற்றிக்கு பின்னர் உருவாக்கப்பட்ட இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடத்தும்பர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு முன்னால் மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அந்த அச்சுறுத்தல் என்ன?
அரசியலமைப்பை மாற்றும் தேவை சிலருக்கு உள்ளது. அரசியலமைப்பை மாற்றி பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட முன்னுரிமையை எம்மிடம் இருந்து பறிக்கும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது.
நாட்டை விடுவித்து ஒருமைப்பாடுள்ள நாட்டை எம்மால் உருவாக்க முடிந்தது. அந்த ஒருமைப்பாட்டுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் ஒற்றையாட்சி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை சேர்த்து அதிகாரத்தை பரவலாக்கலாம்.
இதனால், ஏற்பட போகும் கெடுதியான பிரதிபலன்கள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
நாட்டில் நடப்பவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.
தமிழ் அரசு மூலம் விலக்கிக்கொள்ள வேண்டிய பட்டியல் பற்றி பேசுகின்றனர். பகிரப்பட வேண்டிய அதிகாரங்கள் பற்றி பேசுகின்றனர்.
முதலமைச்சர் இதில் பிரதானமாக செயற்படுகிறார். முதலமைச்சர் அதில் முன்னிலையில் இருக்கின்றார்.
பேஷ்புக்கில் படங்கள் வெளியாகி இருப்பதை நான் பார்த்தேன். ஆனால் இவை ஊடகங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.
இது பற்றி பேசாது தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அமைதியாக உள்ளன.
மக்கள் இவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
எம்மை திட்டுவதற்காகவோ அல்லது விமர்சிப்பதற்கோ அன்று நாட்டில் என்ன நடக்கின்றது என்பது வெளிப்படையாக இருந்தது.
உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.
அந்த உரிமை தற்போது நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.