இளம் வயது இஞ்சினியரோடு 2 பிள்ளையின் தாய் தலைமறைவு

நெல்லை பேட்டை செந்தமிழ் நகர் ஆதிதிராவிட காலனியை சேர்ந்த தம்பதியினர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது 19 வயது மகன், நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.இ. சிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் அவர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 20-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அந்த மாணவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாணவரின் தந்தை நேற்று நெல்லை பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
2 குழந்தைகளின் தாய் ஓட்டம்
இது தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘பேட்டை எம்.ஜி.டி. நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரும், அந்த மாணவரும் ஊரை விட்டு ஓடி விட்டது தெரிய வந்தது. மாணவருடன் ஓடிய அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகள் மட்டுமே கணவருடன் குடும்பம் நடத்தும் அந்த பெண், கணவரை விட்டு விட்டு மற்றொருவரை நாடிச்செல்வதை வழக்கமாக கொண்டவர். கூடு விட்டு கூடு பாய்வது போல கணவர்களை மாற்றி, மாற்றி வாழ்ந்து வந்த அந்த இளம்பெண்ணுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
பெண்ணிடம் சிக்கிய மாணவர்
அவர் தற்போது 4-வதாக பேட்டையை சேர்ந்த ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தார். ஏற்கனவே திருமணமான அவர், இளம்பெண்ணுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறாராம். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்க்கை நடத்தி வரும் அந்த இளம்பெண்ணின் வலையில் சில மாதங்களுக்கு முன்பு மாணவர் விழுந்ததாக தெரிகிறது.
அந்த பெண்ணிடம் தற்போது தொடர்பில் இருக்கும் நபர் மூலம் மாணவருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. தனிமையில் இருக்கும் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அந்த மாணவரை மயக்கி அந்த பெண் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாராம். அடிக்கடி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, பகல் நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டில் மாணவர் தங்கி இருந்ததாக தெரிகிறது.
தீவிர தேடுதல் வேட்டை
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவரும் இளம்பெண்ணுக்கு ஏராளமாக செலவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மாணவருடன் இளம்பெண் தலைமறைவாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. உடன் தன்னுடைய 2 குழந்தைகளையும் அந்த இளம்பெண் அழைத்துச் சென்றுள்ளாராம். அவர்கள் தினமும் இருப்பிடத்தை மாற்றி வருவதாக தெரிவித்த போலீசார், அந்த பெண்ணின் பிடியிலிருந்து மாணவரை மீட்க பேட்டை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.