தாராபுரம் குளம் விவகாரம் : அப்துல்லாஹ் மஹ்ரூப், பைசல் காசிம், தெளபீக் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்…!! சபையில் அமளிதுமளி ஏற்பட்டது

M.M.Minhaj
சபையில் மு.கா.-அ.இ.ம.கா. வாக்குவாதம்
மன்னார் தாராபுரம் குளம் விவகாரம் தொடர்பில் அரசின் பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கிடையே சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்த அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி.யின் பேச்சை அடுத்தே சர்ச்சையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு– செலவுத் திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசனம், அமைச்சுக்களுக்கான செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விவாதத்தின் போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. உரையாற்றுகையில்,
மன்னார் தாராகுளம் புனர்நிர்மாணத்திற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு யுத்த வடுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 150 மில்லியன் ரூபா போதுமானதா? எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ரகசிய இணக்கத்தையும் தொடர்பையும் கொண்டுள்ளனர். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செயற்பாடுகளை கண்டு கிலியடைந்துள்ளனர் என்று கூறிய போது சபையில் கோஷமும் குழப்பமும் ஏற்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்களான பைஸல் காசிம், தௌபீக் ஆகியோர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் உரைக்கு இடையூறு விளைவித்தனர்.
இதன்போது சபைக்குள் ஓடிவந்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பைசல் காசிம் கூறுகையில்,
அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. தவறான கருத்தை முன்வைக்கின்றார். தாராபுரம் குளம் நிர்மாணத்திற்கு நான் தடை விதிக்கவில்லை. தவறான கருத்தை சபை முன்வைக்க வேண்டாம் என்றார்.
இதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப், பைசல் காசிம், தெளபீக் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதனை கடுமையாக விமர்சித்திருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இகழ்ந்து பேசியமையால் பைசல் காசிம் கடுமையாக சீற்றமுற்று தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
அப்துல்லாஹ் மஹ்ரூபின் உரைக்கு முன்னர் ரிஷாத் பதியுதீன், நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவின் ஆசனத்திற்கு அருகில் சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கம் கை அசைத்தவாறு பேசிக் கொண்டிருந்தார். இதன் பின்னர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு சென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏதோ கதைத்து கொண்டிருந்தார்.
இதன் பின்னரே அப்துல்லாஹ் மஹ்ரூப் உரையாற்றினார்.
இதன்பின்னர் இடம்பெற்ற அவரின் உரையின்போதே சர்ச்சை ஏற்பட்டது.
அப்துல்லாஹ் மஹ்ரூபின் சர்ச்சையான உரை நிகழ்வடைந்த பின்னர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பைசல் காசிம், தெளபீக் ஆகிய இருவரும் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு சென்று இரு கைகளையும் அசைத்து ஏதோ பேசிக் கொண்டார்.