அரச அதிகாரியாக 26 வருடம் பணிப்புரிந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : பதுளையில் சம்பவம்

பண்டாரவளையைச் சேர்ந்த ஆர்.எம். நாலினி குசுமலதா என்ற 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கைது பதுளை மஜிஸ்ரேட் மேலதிக நீதிபதி ஆனந்த மொரகொட முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி அவரை அடுத்தமாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
ஊவா மாகாண பொறியியலாளர் தினைக்கள தொழில்நுட்ப அதிகாரியாக, கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச சேவையில் குறித்தப் பெண்ணுக்கு நியமனம் வழங்கப்பட்டது.
இதன்போது இப்பெண் சமர்ப்பித்த பரீட்சை திணைக்களத்தின் 7420956 என்ற சுட்டிலக்கத்தையுடைய போலி கல்விச் சான்றிதழ் 26 வருடங்களுக்குப்பின் போலியானதென உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, இப்பெண் கைது செய்யப்பட்டு, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார்.
இப்பெண்ணிற்கு எதிராக பதுளைப் பொலிசார் 1992ம் ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதியின் அரசின் பொதுச் சொத்து மோசடி குறித்த 5(1), 5(2) என்ற சரத்திற்கமைய பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இப்பெண் தனது சேவைக்காலத்தில் அரசினால் பெறப்பட்ட அடிப்படைச் சம்பளத்தில் 27 இலட்சத்து 42 ஆயிரத்து 156 ரூபா மோசடி செய்திருப்பது, ஆரம்ப விசாரணையில் தெளிவாகியுள்ளது.
அத்துடன் அடிப்படைச் சம்பளத்திற்கு மேலாக ஏனைய கொடுப்பனவுகள் பெற்றமை தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை அத்தொகை மதிப்பிடவில்லை.
குறிப்பிட்ட பெண் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த போது அது குறித்து அவரது பிரத்தியேக கோவை பரிசீலனையின் போதே அவர் சமர்ப்பித்த போலிச் சான்றிதழ் தொடர்பான விடயம் வெளிவந்தது.
மேற்படி சம்பவம் குறித்து, குறிப்பிட்ட திணைக்களத்தினால் அப்பெண் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பெண்ணின் சேவையும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.