ஞானசாரவின் ஒருநாள் கால அவகாசம்; எதிர்பார்க்கப்படும் கைதுகள் முள்ளிநியூஸ்

ஞானசாரவின் ஒருநாள் கால அவகாசம்; எதிர்பார்க்கப்படும் கைதுகள்


அண்மையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பினர் மாளிகாவத்தையில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலமாக புதிதாக உருவெடுத்த டான் பிரியசாத் எனும் நபரின் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், இனவாத நடவடிக்கைகளின் பின்னணியில் எதிர்வரும் 19ம் திகதி தம்புள்ள மற்றும் கூரகல (ஜெய்லானி) பகுதிக்குச் செல்வதற்கு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு நிலையில் நேற்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் நடவடிக்கையால் வெல்லம்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நாடு திரும்பியுள்ள பொது பல சேனா கடும்போக்குவாத அமைப்பின் செயலாளர் ஞானசார, தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையில் இன்றைய தினத்திற்குள் டான் பிரியசாத்தை விடக் கடுமையான முறையில் தம்மையும் புத்தசாசனத்தையும் அவமதித்துப் பேசிய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ராசிக் எனும் நபர் கைது செய்யப்படாது விடின் நீதித்துறையின் பக்கசார்பை எதிர்த்து நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் கிருலபனயில் அமைந்துள்ள பொது பல சேனாவின் அலுவலகத்துக்கு வருமாறு சிங்கள கடும்போக்குவாதிகள் மத்தியில் தற்போது பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பினரின் ஆர்ப்பாட்ட தினமன்று புறக்கோட்டையில் இனவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டு எச்சரிக்கை விடுத்திருந்த டான் பிரியசாத் தொடர்பில் ஏலவே ஸ்ரீலதஜ அமைப்பினர் முறையிட்டதன் பின்னணியில் அவர் விசாரிக்கப்பட்டிருந்தார். எனினும், அதன் பின்னும் தனது இனவாத நடவடிக்கைகளைத் தொடர்ந்த குறித்த நபர், அநுராதபுரம் வரை சென்று இனமுறுகலைத் தூண்டும் வகையான பேச்சுக்களைப் பேசியிருந்த நிலையில் எதிர்வரும் 19ம் திகதி தம்புள்ள பள்ளிவாசலுக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவும் கூரகல செல்லவும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கைதாகியுள்ளார்.



எனினும், புத்தர் மனித மாமிசம் உண்டார் எனவும் புத்தசாசனத்தை அவமானப்படுத்தியும் பேசுவதோடு தனது பிணை நிபந்தனைகளையும் மீறி பௌத்த துறவிகளை அவமதித்துப் பேசிய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ராசிக் சுதந்திரமாக நடமாடுவதாகவும் நீதித்துறை அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ள ஞானசார அதறகேதுவாக இன்றைய தினம் வரை பொறுத்துப் பார்க்கலாம் என தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் இனவாதத்தைத் தூண்டும், கைது செய்யப்பட்டு தடுக்கப்பட வேண்டிய நபர்களின் பட்டியலில் ஞானசார, அப்துர் ராசிக் மற்றும் மட்டக்களப்பு துளவி அம்பிட்டிய சுமனரத்னவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க அதேவேளை, அப்துர் ராசிக்கை கைது செய்வதற்கு ஏதுவான ஆதாரங்கள் சிசிடியினரால் திரட்டப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.



டான் பிரியசாத்தின் கைதைத் தொடர்ந்து அப்துர் ராசிக்கும் கைது செய்யப்பட வேண்டும் என முஸ்லிம்கள் மத்தியிலும் பரவலாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க சுட்டிக் காட்டத்தக்க அதேவேளை, பொது பல சேனாவுடன் இணைந்து பல கடும்போக்குவாத அமைப்புகள் பொலிசார் ராசிக்கையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளமையும் மாளிகாவத்தையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், உத்தேச முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்துக்கு எதிரானது என கூறப்பட்ட போதிலும் அங்கு ஞானசாரவைக் குறி வைத்து கடுந்தொனியில் ராசிக் உரை நிகழ்த்தியமை சர்ச்சையை உருவாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW