நீதியமைச்சரின் கொதிப்பும் – முஸ்லிம்களின் கொந்தளிப்பும்! முள்ளிநியூஸ்

நீதியமைச்சரின் கொதிப்பும் – முஸ்லிம்களின் கொந்தளிப்பும்!


ஆறிப்போன புண்ணை மீண்டும் தோண்டியதாயிற்று நீதியமைச்சரின் பேச்சு என நேற்று முதல் பரவலான கருத்து வெளிப்பாடு, குறிப்பாக முஸ்லிம்களிடமிருந்து சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வருகிறது.

இந்தக் கோபத்தின் பின்னணியில் இரு முக்கிய காரணங்கள்:

1. ISIS அமைப்பில் 32 முஸ்லிம்கள் இணைந்து கொண்டுள்ளார்கள் என அமைச்சர் தெரிவித்தது
2. இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரிவுகளுக்கிடையில் உட்பூசல், உயிர் பறிப்பு மற்றும் அடிப்படைவாதம் தலைவிரித்தாடுகிறது எனும் குற்றச்சாட்டு

இதற்கு மேலதிகமாக நாட்டில் அதிகமான ‘சர்வதேச பாடசாலைகளை’ (International School) நடாத்தி வரும் முஸ்லிம்கள் தமது பாடசாலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து அடிப்படைவாதத்தைப் போதிக்கக் கூடிய அல்லது மூளைச்சலவை செய்யக்கூடியவர்களை வரவழைப்பது, போதிப்பது போன்ற விடயங்கள்.

இலங்கையெனும் நாடொன்றுதான் பௌத்தர்களுக்கென இருக்கும் நாடு, எனவே அது ஆக்கிரமிப்புக்குள்ளாகிறது எனும் பொது பல சேனா மற்றும் கடும்போக்குவாதிகளின் வழிமுறையை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச பின்பற்றவில்லை. மாறாக, அவரது முழு உரையில் ஒழுக்கங்கெட்ட பௌத்த துறவிகள், இனவாதத்தைப் போதிக்கும் பௌத்த துறவிகள் மற்றும் இனவாதிகள் குறித்தும் பேசியிருந்தார். ஆதலால் அவரைப் பொறுத்தவரை தான் ‘நியாயக்’ கோட்டில் நின்றே உரையாடியதாக அவரது தரப்பு நியாயம் இருக்கும்.

மேலதிகமாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அப்துர் ராசிக்கைப் பிடித்து உள்ளே போட்டிருக்கிறோம் என அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே அவர் கைது செய்யப்பட்டதையும் நீதியமைச்சர் உறுதி செய்திருந்தார்.

எனினும், ஞானசார வெளியிலிருக்க டான் பிரியசாத்தும் ராசிக்கும் கைதானது சரியாகுமா எனவும் ராசிக் அப்படியென்ன செய்தார்? ஞானசாரயைத் தானே ஏசினார் அவர் ஒரு துறவியா? எனவும் மைத்ரி குணரத்ன எனும் சட்டத்தரணியின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு அவரது ஆதரவாளர்கள் கேள்வி கேட்கின்றனர். ஞானசார என்பவரை இலங்கையின் பௌத்த சங்க சபை தூக்கி வீசாத வரை அவர் ஒரு பௌத்த துறவியில்லை என்பதை எந்த நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளாது. மாறாக சட்டத்தரணிகள் தமது வருவாயை உறுதி செய்து கொள்வதற்கு எதையும் பேசக்கூடிய காலமிது, சிந்தித்தால் நலமுண்டு.

எனினும், இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் மாத்திரமன்றி முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள் என நீதியமைச்சர் கொதித்துப் பேசியது உணர்வுரீதியாக அமைதியான முஸ்லிம்களைப் பாதிதுள்ள அதேவேளை, விஜேதாச ராஜபக்சவின் உரையடங்கிய காணொளி அவரது சமூக வலைப் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. அங்கு, ஏகத்துக்கும் முஸ்லிம்கள் அவரது உரையைப் பாராட்டியிருக்கிறார்கள். அதிலிருந்து, நல்லாட்சி நிலவ வேண்டுமானால் எல்லாவிதமான அடிப்படைவாதமும் களையப்பட வேண்டும் என்பதை விரும்பும் பகுதியினரும் இச்சமூகத்தில் உள்ளமை புலப்படுகிறது.

ஆயினும் மஹிந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பௌத்த அடிப்படைவாதத்தைக் களைவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் எனும் போர்வை மைத்ரிபால அரசுக்கும் தேவைப்படுகிறதா எனும் கேள்வி பலர் மத்தியில் எழத்தான் செய்கிறது. இந்த ‘நுட்பத்தை’ பாவித்த முதலாவது இலங்கை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச இல்லையென்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இதற்கு முன்னர் இருந்த நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இதே நுட்பத்தைப் பாவித்து, இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாக ஐ.நா சபைக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கையில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் துன்பங்கள் குறித்து அக்கால கட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்த ரவுப் ஹக்கீம், ஒரு நீதியமைச்சராக நடுநிலையில் செயற்பட இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாகவும் அவ்வாறான அடிப்படைவாதிகளால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றையும் தனது பட்டியலில் சேர்த்திருந்தார். இந்தப் பட்டியலை அப்போது சிலோன் டுடே பத்திரிகை வெளியிட்டிருந்து, இது குறித்து கேட்கப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராக அன்றி அவர் நீதியமைச்சராக கடமையைச் செய்தார் என்று அப்போது விளக்கமும் அளிக்கப்பட்டது.

எனவே, விஜேதாச ராஜபக்ச முதலாவது நபரில்லையென்பதும் முன்னர் ரவுப் ஹக்கீமின் இவ்வாறு செய்தார் என்பதோடு இவ்விரு நீதியமைச்சர்களும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பையே இந்த வகையறாக்குள் விளித்திருந்ததும் விதிவிலக்கானவை அன்று. ஆனாலும் ஹக்கீமை விட ஒரு படி மேலே சென்றுள்ள விஜேதாச, இலங்கையில் இயங்கும் எல்லா ஜமாத்கள் குறித்தும் பேசியிருப்பது முஸ்லிம்களுக்குள் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை.

தவ்ஹீத் ஜமாத் என்கிற அமைப்பினரை ஏனைய அனைவரும் சேர்ந்து கண்டித்தோம், விடயத்தையும் எல்லோரும் சேர்ந்து கண்டித்தோம் அப்படியிருக்க நாங்கள் எப்படி உங்கள் வகையறாக்கள் வருகிறோம் எனும் கேள்வி இந்தப்புறம் இருந்து முன் வைக்கப்படுகிறது. ஆனாலும் பேப்பர் கண்டனங்களால் திருப்திப்படப்போவதில்லையென்பதையே விஜேதாச சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று கணித்தால் அது கூட மிகையில்லை.

ஆக்கபூர்வமான சமூக மாற்றம் நம்மிடம் அவசியப்படுகிறது என்பதை நமக்கு அவசரமாகச் சொல்வதற்கே மஹிந்த அரசும் பொது பல சேனாவைக் களமிறக்கியது.

அரசாங்கம் வேறு பணியில் பிசியாக இருக்க நாம் ஒவ்வொரு தெருவிலும் ஜமாத்துக்கொரு பள்ளியென நிர்மாணித்துக்கொண்டு போகிறோம். என்.ஜி.ஓக்களின் (NGO) ஆளுமை ஆட்டிப்படைப்பதால் சில இடங்களில் அளவுக்கதிகமான செயற்பாடுகள், சீமெந்து மாத்திரம் பூசி நிறைவு செய்ய வேண்டிய கட்டிடப் பணியை அப்படியே நிறுத்தி விட்டு, பக்கத்துக் காணியில் புதிதாகப் பள்ளிவாசல் கட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. முஸ்லிம்களாக நமக்கு அதில் சந்தோசமாக இருந்தாலும் மாற்று மத்தவர்கள் ஏன் சந்தோசப்பட வேண்டும்? எனும் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்க்க விளைகிறோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு கால கட்டத்திலும் முஸ்லிம்கள் இவ்வாறான அரசியல் சோதனைகளை எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள். அதிலும் இந்த நவீன காலத்தில் இதனை இன்னும் ஆழமாகக் கையாள வேண்டிய தேவையிருப்பதால் நாம் ‘நல்லவர்கள்’ என கோசமிட்டுக் கொண்டிருப்பதை விட நமக்குள் இருக்கும் பிளவுகளைக் கலைந்து, ஒற்றுமையான சமூகமாக மாறிச் செயற்படுவதற்கான வழிமுறைகளை, நடைமுறைகளைக் கொண்டு இந்த சமூகத்தை வழி நடாத்த உலமாக்களும், சமூகத் தலைவர்களும் முன் வர வேண்டும்.

பேச்சளவில் மாத்திரம் நாம் குறி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை சாதுர்யமாக எதிர்கொள்ளத் தவறுவது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் துரோகமாகிவிடும். எனவே, ஆளுக்கொரு அமைப்பாகப் பிரிந்து நின்று தமது அமைப்பைக் காப்பாற்றுவதற்காக மற்றவரைக் குறை கூறிக்கொண்டிராது சந்தர்ப்பத்துக்கானதாகவன்றி நிரந்தரமான ஒற்றுமைக்கு வழி தேட வேண்டிய காலமிது!
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW