கல்ஹின்ன சம்பவம்: வேகமாக பரவும் ஊகங்களும் ‘மர்மமும்’ முள்ளிநியூஸ்

கல்ஹின்ன சம்பவம்: வேகமாக பரவும் ஊகங்களும் ‘மர்மமும்’



நேற்றைய தினம் அங்கும்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியிலான மர்மம் இன்று இரண்டாவது நாளை எட்டியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எதிரில் இருந்த பள்ளிவாசல் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ள அதேவேளை தற்போது அதனை அடிப்படையாகக் கொண்ட எண்ணப்பாடுகளும் ஊகங்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பதியப்பட்டு வருகின்றன.

எனினும், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இவ்வாறு வெளியிடப்படும் ஊகங்கள் தொடர்பில் எதுவும் தெரியாது என நேற்றிரவு நாம் மேற்கொண்ட சந்திப்பின் போது திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

சம்பவம் இடம்பெற்றதும், விரைந்த பொலிசார் இச்சம்பவம் இன முறுகலில்லையென தெளிவு படுத்தும் நோக்கில் அவசரமாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். அதில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் ரீ56 துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களுடன் பொது மக்கள் உதவியுடன் 30 வயதுடைய முஹம்மத் அலி எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் பயணித்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவம் ஆகக்குறைந்தது மேலும் இரு முஸ்லிம் நபர்கள் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னணியில், குறித்த சம்பவம் தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இடம்பெற்றதாக பொலிசாரின் தகவல் தெரிவித்திருந்த நிலையில், பின்னராக சிசிடிவி பதிவில் வாகனம் முன் செல்வது, பின் வருவது (reverse) போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பொது மக்களால் பிடிக்கப்பட்டிருந்தவர் அப்பாவி எனவும் அவரும் சந்தேகநபர்களால் மிரட்டி வாகனத்தில் கடத்தப்பட்டு பிறிதொரு இடத்தில் கைவிடப்பட்டுச் சென்றதாகவும் இது இனவாத சதியாகவே இருக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச பிரிவைச் சேர்ந்த குருநாகல் அப்துல் சத்தார் என்பவரது ‘அறிவுரையையும்’ ஆதாரங்காட்டி ஓடியோ பதிவொன்றும் மேலும் குறித்த சம்பவம் திரிபு படுத்தப்பட்டிருப்பதாக சில பதிவுகளும் பரவ ஆரம்பித்தன.

இதேவேளை, கைதானவர் தொடர்பில் பிரதேசவாசிகள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் ஆகக்குறைந்தது கடந்த ஒன்றரை மாதங்களாக கல்ஹின்ன பகுதிக்குள் வந்து சென்றவராகவும் முச்சக்கர வண்டி விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் ஒரு சிலர் தெரிவித்திருந்தனர். எனினும், பிரதேச மக்களுக்கும் குறித்த கொலைக்கான காரணம் குறித்த தெளிவு இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், உயிரிழந்தவரது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் ஒன்றின் அடிப்படையிலான ஊகங்களும் பரவ ஆரம்பித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனினும், குடும்பத்தினர் தாம் அவ்வாறு எதையும் அறியவில்லையென உறுதியாக தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த இளைஞர் மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியா செல்ல முயற்சி செய்துள்ளமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் அவரது உறவுக்காரரான பரிஸ்டர் ஒருவர் அதற்கான அனுசரணையை வழங்குவதற்கு இணங்கியிருந்துள்ளார்.

இந்நிலையிலேயே நேற்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளதன் பின்னணியில், இது முகவர் ஒருவரோடு ஏற்பட்ட தகராறின் விளைவு என வெளியிடப்பட்டு வரும் ஊகத்தையும் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த பல்வேறு ஊகங்கள் தொடர்ந்தும் ஆங்காங்கு வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை இன்று மதியமே மரண பரிசோதனை அதிகாரியின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றமை குறித்து வபாத்தான இளைஞரின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சோனகர்.கொம் செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் இனவாத சம்பவமாக இருக்க முடியாது எனவே பொலிசார் உறுதியாக நம்புகின்ற அதேவேளை கைது செய்யப்பட்ட நபரை குறித்த பிரதேசத்தின் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்தே மடக்கிப் பிடித்திருந்தமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணியில் ஆகக்குறைந்தது மேலும் இருவர் தேடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அது மேலும் மூவராக இருக்கலாம் எனவும் அதில் ஒருவர் முன்னாள் இராணுவ உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை துப்பாக்கிச் சூட்டின் பின் வேகமாக விரைந்த வாகனம் சிறு விபத்துக்குள்ளாகி நிறுத்தாமல் சென்ற நிலையிலேயே சூழவிருந்த அனைத்து பிரதேசங்களின் பொலிசாரும் குறித்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.

எனினும், வாகனத்தைக் கைவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் தற்போது கைதாகியுள்ளவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டிருந்த வேளையில் ஏனையோரைத் தெரியாது என முன்னராக தெரிவித்துள்ள அதேவேளை பொலிசார் குறித்த நபரைப் பொறுப்பேற்ற பின் வெளியான ஊடக அறிக்கையிலேயே மேலும் இரு முஸ்லிம் நபர்கள் தேடப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில், விரைவில் உண்மை வெளியாகும் என பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW